எட்வர்ட்ஸ் அதிரடி முதல் அரையிறுதி தோல்வி வரை இந்தியா-இங்கிலாந்து உலகக் கோப்பை ஃபிளாஷ் பேக்

Update: 2020-03-04 02:24 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. இதில் முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதியுள்ள போட்டிகளை சற்று திரும்பி பார்ப்போம்.

2009 குரூப் போட்டி: எட்வர்ட்ஸ் அதிரடி

முதல் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் குரூப் போட்டியில் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மித்தாலி ராஜ் மட்டும் சிறப்பாக விளையாடி 29 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் எட்வர்ட்ஸ் மற்றும் டெய்லர் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 113 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 15.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

2012 குரூப் போட்டி: மீண்டும் அதிரடி காட்டிய எட்வர்ட்ஸ்

இந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் குரூப் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியில் பூனம் ராவத் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால், இந்திய அணி 20 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. மித்தால் ராஜ் மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சார்லட் எட்வர்ட்ஸ் அதிரடி துவக்கம் அளித்தார். இதனால் 17.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. எட்வர்ட்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து அசத்தினார். இது உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா அடையும் இரண்டாவது தோல்வி ஆகும்.

2014 குரூப் போட்டி: ஸ்ரப்சோலின் சிறப்பான பந்துவீச்சு

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இந்த உலகக் கோப்பையிலும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்ததால், குரூப் போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரப்சோலின் பந்துவீச்சில் வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய ஸ்ரப்சோல் 6 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் சாரா டெய்லர் 28 ரன்கள் விளாசினார்.

2016 குரூப் போட்டி: பரப்பரப்பான போட்டியை வென்ற இங்கிலாந்து

இம்முறை இந்தியா-இங்கிலாந்து அணிகள் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் விளையாடின. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் இந்திய பந்துவீச்சில் சற்று திணறியது. பரப்பரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பியூமவுண்ட் எடுத்த 31 ரன்களால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்து வென்றது.

2018 அரையிறுதிப் போட்டி: ஹீதர் நைட்டின் சிறப்பான பந்துவீச்சு

2018ஆம் ஆண்டு இந்திய அணி ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையில் களமிறங்கியது. இம்முறையும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதனால் அந்தத் தொடரை இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. எனினும் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஹீதர் நைட்டின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 19.3 ஓவர்களில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.