மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸி. அணிகள் மோதல்

Update: 2020-03-05 12:43 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 2 அரையிறுதிப் போட்டிகளும் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. சிட்னியில் காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

நடப்புத் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்ததால், இந்திய அணி ஐசிசி விதிகளின்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது இந்திய மகளிர் அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும்.

இதனையடுத்து சிட்னியில் மழை சற்று குறைந்ததால், இரண்டாவது அரையிறுதி தாமதமாக தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

 

ஆஸ்திரேலிய அணி 2010,2012,2014,2016,2018 மற்றும் 2020 ஆகிய 6 முறையும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

அதேசமயம் இதுவரை 3 முறை டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. நடப்புத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முன்னைப்பில் ஆஸ்திரேலிய அணி இருக்கும் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும்.

மேலும் சர்வதேச மகளிர் தினமான வரும் 8ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்பெர்ன் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. அத்துடன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு அன்று தான் பிறந்தநாள். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பிறந்தநாள் பரிசாக உலகக் கோப்பை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.