மகளிர் கால்பந்து லீக்: மீண்டும் அசத்திய சந்தியா; சேது அணிக்கு நான்காவது வெற்றி

Update: 2020-02-03 07:43 GMT

மகளிர் கால்பந்து லீக்(ஐ.டிபிள்யூ.எல்)2020 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியன் அணியான சேது எஃப்சி அணி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்று உள்ளன.

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேது எஃப்சி அணி கிக் ஸ்டார்ட் எஃப்சி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சேது எஃப்சி அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் சந்தியா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக கோல் அடித்தார். அதன்பின்னர் மீண்டும் சேது எஃப்சி அணி கோல் நிறையே முயற்சிகள் மேற்கொண்டது. 39ஆவது நிமிடத்தில் சந்தியா மற்றும் பெசன்ட் எடுத்த நகர்த்தலை கோல் கீப்பர் தடுத்து திருப்பி அனுப்பினார். எனினும் திரும்பி வந்த பந்தை சுமத்ரா 30 யார்டு கோட்டிற்கு அருகிலிருந்து லாவகமாக கோல் ஆக்கினார்.

முதல் பாதியின் முடிவில் சேது எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஆட்ட்தின் கடைசி நிமிடத்தில் சந்தியா மீண்டும் கிடைத்த வாய்ப்பு ஒன்றை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதன்மூலம் சேது எஃப்சி அணி 3-0 என்ற கணக்கில் கிக் ஸ்டார்ட் எஃப்சி அணியை தோற்கடித்தது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதல் அணியின் ஸ்டிரைக்கர் சந்தியா சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கோலாபூர் எஃப்சி அணி மற்றும் பிபிகேடிஏவி அணி எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. இது நடப்புச் சாம்பியனான சேது எஃப்சி அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நடப்புத்தொடரில் சேது எஃப்சி அணி இதுவரை விளையாடியுள்ள நான்குப் போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி என 9

புள்ளிகளுடன் உள்ளது. சேது எஃப்சி அணி க்ரிப்ஷா எஃப்சி

அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அதேபோல இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த கிக் ஸ்டார்ட் எஃப்சி அணி 4 போட்டிகளில் 6புள்ளிகளுடன் உள்ளது.கிக் ஸ்டார்ட் எஃப்சி அணி வரும் 5ஆம் தேதி அடுத்தப் போட்டியில் பிபிகேடிஏவி அணியை எதிர்கொள்கிறது.சேது எஃப்சி அணி வரும் 6ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பரோடா எஃப்ஏ அணியுடன் மோதவுள்ளது.