தமிழகத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு கிடைக்குமா துரோணாச்சார்யா விருது?

Update: 2020-08-10 14:29 GMT

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த விளையாட்டிற்கும் கிடைப்பதில்லை. ஆனால் சமீபத்தில் சில புரோ லீக் தொடர்களால், கிரிக்கெட்டை தவிர இதர விளையாட்டுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதாவது கபடி, பேட்மிண்டன், ஹாக்கி ஆகிய விளையாட்டு போட்டிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளன.

ஆனால் இன்னும் ஒரு சில விளையாட்டுகள் ரசிகர்களின் கவனத்தை பெறாமல் தான் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கைப்பந்து விளையாட்டு. இந்த விளையாட்டில் ஒரு சிறப்பான பயிற்சியாளராக விளங்கி வருபவர் தட்சிணாமூர்த்தி. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அவர் செய்துள்ள சாதனை என்ன தெரியுமா?

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் கைப்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர். அது இவரை கைப்பந்து பயிற்சியாளராக மாற்றியது. இவர் FIVB Level 3 பயிற்சியாளாராக உள்ளார்.

தட்சிணாமூர்த்தி எஸ்.ஆர்.எம் அணியுடன் (படம்: எஸ்.ஆர்.எம் இணையதளம்)

மேலும் இவர் ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது பயிற்சியால் அந்தக் கல்லூரி அகில இந்திய கல்லூரிகள் கைப்பந்து போட்டியில் 8 தங்கம் மற்றும் 4 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இவருடைய சாதனை இதுமட்டுமல்ல. இவர் ஏறக்குறைய 35 வீரர்களை இந்திய அணிக்காக தயார் செய்துள்ளார். அவர்களில் சிலர் தற்போது இந்திய கைப்பந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆர். காமாராஜ், உக்கிரபாண்டியன், ஜெரோம், வினித் குமார், முத்துசாமி, பிரபாகரன் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

இவர்களுள் ஆர்.காமாராஜ் ஆசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே இந்தியர் ஆவார். அவரை தயார் செய்த பெருமை தட்சிணாமூர்த்தியையே சேரும். கிட்டதட்ட கைப்பந்து விளையாட்டில் 30ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து பல வீரர்களை தட்சிணாமூர்த்தி உருவாக்கியுள்ளார்.

இத்தகைய சாதனைக்கு சொந்தக் காரரான தட்சிணாமூர்த்தி இம்முறை மத்திய அரசால் வழங்கப்படும் ‘துரோணாச்சார்யா’ விருது பெற விண்ணப்பித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த விருதுகள் வழங்கப்படும். இம்முறையும் இந்த விருதுகளை தேர்வு செய்ய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஹாக்கி வீரர் சர்தார் சிங் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.இ.ஶ்ரீதரன் கைப்பந்து விளையாட்டிலிருந்து துரோணாச்சார்யா விருதை பெற்றார். அவருக்கு பிறகு கைப்பந்து விளையாடிற்காக இரண்டாவது முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.