விராட் கோலியின் டாப் 5 சிறந்த ஐபிஎல் தருணங்கள் - பிறந்தநாள் ரீவைண்ட்!

Update: 2020-11-05 03:19 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனுமான விராட் கோலி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்துள்ள விராட் கோலியின் சிறந்த 5 ஐபிஎல் தருணங்கள் என்னென்ன?

2 விக்கெட் vs டெக்கன் சார்ஜர்ஸ் (2008):

முதலாது ஐபிஎல் தொடரில் யு-19 உலகக் கோப்பையை வென்றிருந்த இளம் விராட் கோலி களமிறங்கினார். இவர் அந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் செய்தார். அந்தத் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய விராட் கோலி, 25 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மறக்க முடியாத 2011 தொடர்:

2011ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தத் தொடர் முழுவதும் விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் தான் 500 ரன்களுக்கு மேல் அடித்தார். அத்துடன் இது அவருக்கு சிறப்பான ஐபிஎல் சீசனாக அமைந்தது.

ஆர்சிபி கேப்டன் விராட்(2013):

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விராட் கோலி ஆர்சிபி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தொடர்ந்து 7ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். 2013ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 16 போட்டிகளில் 9 வெற்றிப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை ஒரு வெற்றி குறைவாக இருந்ததால் இழந்தது.

ஒரே ஐபிஎல் தொடரில் 973 ரன்கள்(2016):

2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விராட் கோலியின் தொடராகவே அமைந்தது. இந்தத் தொடரில் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. எனினும் இந்தத் தொடரில் பெங்களூரு அணியை தனி நபராக விராட் கோலி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். ஏனென்றால், இந்தத் தொடரில் 4 சதங்கள் உட்பட 973 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான். இந்தச் சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்கவில்லை.

கையில் ஸ்டிச் உடன் சதம் கடந்த விராட்(2016):

2016ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலிக்கு ஃபில்டிங்கின் போது கையில் அடிபட்டது. இந்த அடி மிகவும் பலமாக இருந்தது. கையில் 7-8 தையல் போட வேண்டிய அளவிற்கு பெரிதாக காயம் அமைந்தது. எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் விராட் கோலி பேட்டிங்கில் களமிறங்கி தனது 4ஆவது சதத்தை பதிவு செய்தார். ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விராட் கோலி களமிறங்கியது அனைவரையும் ஈர்த்தது.

மேலும் படிக்க: லீக் சுற்றில் மறக்க முடியாத டாப் 5 போட்டிகளின் ஃபிளாஷ்பேக்