யு எஸ் ஓபன் 2020: இந்திய வீரர் பிரஜ்னேஷிற்கு மிகுந்த ஏமாற்றம்

Update: 2020-08-30 06:03 GMT

இந்தியாவின் முன்னணி வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் இந்த ஆண்டிற்கான யு எஸ் ஓபன் தொடரில் விளையாடும் வாய்ப்பு நூலளவில் தவறிப்போகியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கும் விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் போட்டிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் தொடர் கொரோனா காரணமாக இந்தாண்டு நடக்காது என அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் நடக்கவிருந்த பிரெஞ்சு ஓபன் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுமித் நகால்

இந்நிலையில் மற்றொரு கிராண்ட்ஸ்லாம் தொடரான யு எஸ் ஓபன் பலத்த எதிர்பார்ப்புகிடையில் நாளை தொடங்குகிறது. கொரோனோ வைரஸ் பாதுகாப்பு காரணமாக பல முன்னணி வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரர்களின் நலன் கருதி தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகத் தரவரிசையில் முதல் 128 ரேங்கிங்ல் இருக்கும் வீரர்கள் மட்டுமே தகுதிபெற முடியும். இதன்மூலம் தரவரிசையில் 127 ஆம் இடத்தில் இருந்த இளம் இந்திய வீரர் சுமித் நகால் முதன்மை சுற்றுக்களில் விளையாட தகுதி பெற்றார். மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபன்னா மற்றும் திவிஜ் சரண் ஆகியோர் தங்களது இனைகளுடன் களமிறங்கிறார்கள்.

தரவரிசையில் 132ஆம் இடத்தில் இருக்கும் பிரஜ்னேஷ் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. இருப்பினும் சில வீரர்கள் விலகினால் இவர் தகுதி பெறமுடியும் என்ற வாய்ப்பு இருந்தது. இதனால் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் விளையாட தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்கா பயணம் செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரஜ்னேஷ் தகுதி பெறவில்லை. மேலும் ஒரே ஒரு வீரர் விலகியருந்தாலும் இவர் தகுதி பெற்றிருப்பார். ஆனால் வருத்தமளிக்கும் விதமாக அது நடக்கவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்தாலும், இதற்கு காரணம் தனது ரேங்கிங் மட்டுமே எனவும் சிறப்பாக விளையாடி அடுத்த கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தகுதி பெறுவேன் என முதிர்ச்சியாக கூறினார் பிரஜ்னேஷ். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கும் தகுதி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.