யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் கடந்த 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ளார். இவர் கனடாவின் டெனிஸ் ஸப்போவாலாவ் ஸப்லோவுடன் இணைந்து யுஎஸ் ஓபனில் பங்கேற்றுள்ளார்.
இந்த ஜோடி முதல் சுற்றில் உள்ளூர் இணையை எளிதாக வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி ஜெர்மனியின் மைஸ்-கிராவிட்ஸ் இணையை எதிர்த்து விளையாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து சூதாரித்து கொண்ட போபண்ணா ஜோடி இரண்டாவது செட்டை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது செட்டை போபண்ணா ஜோடி 6-4 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் நடைபெற்றது. இதிலும் சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி 6-3 என்ற கணக்கில் செட்டை வென்றது. அத்துடன் 4-6,6-4,6-3 என்ற கணக்கில் மூன்றாவது சுற்றை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் போபண்ணா-ஸப்லோவ் இணை ரோஜர்-டெகாவ் ஜோடி எதிர்த்து விளையாட உள்ளது. 2018ஆம் ஆண்டிற்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் போபண்ணா தற்போது தான் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் நாகல் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 6 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றை வென்ற இந்தியர் என்ற சாதனையை சுமித் நாகல் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘போலியோ பாதிப்பு முதல் வீல் சேர் கூடைப்பந்து வரை’- ஒரு பெண்ணின் வெற்றிப் பயணம்