யுஎஸ் ஓபன் 2020: “டென்னிஸை மாற்றப்போகும் வரலாற்று வீராங்கனை நயோமி ஒசாகா” - மகேஷ் பூபதி புகழாராம்

Update: 2020-09-13 06:45 GMT

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நயோமி ஒசாகா பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அசரென்காவை எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை விக்டோரியா அசரென்கா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பிற்கு இரண்டாவது செட்டிலும் அசரென்கா 2-0 என முன்னிலை பெற்று இருந்தார். இதனைத் தொடர்ந்து சுதாரித்து கொண்ட நயோமி ஒசாகா தனது சிறப்பான ஆட்டட்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

இதனால் யுஎஸ் ஓபன் சாம்பியனை தீர்மானிக்க மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது. அதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நயோமி ஒசாகா 6-3 என கைப்பற்றினார். அத்துடன் 1-6,6-3,6-3 என்ற கணக்கில் அசரென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

யுஎஸ் ஓபன் வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் செட்டை இழந்து சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் நயோமி ஒசாகா படைத்தார். இதனைத் தொடர்ந்து நயோமி ஒசாகாவை பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நயோமி குறித்து பதிவை இட்டுள்ளார். அதில், “வாழ்நாளில் ஒருமுறை தோன்றும் வீராங்கனை நயோமி ஒசாகா. அவர் டென்னிஸ் விளையாட்டை மாற்றி அமைக்கப் போகும் வீராங்கனை” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த யுஎஸ் ஓபன் தொடரில் நயோமி ஒசாகா 7 முக கவசங்களை பயன்படுத்தினார்

இதற்கு காரணம் 22 வயதான நயோமி ஒசாகாவின் டென்னிஸ் விளையாட்டும் மட்டுமல்ல அவரின் பிற செயல்களும் தான். இந்த யுஎஸ் ஓபன் தொடரில் நயோமி ஒசாகா 7 முக கவசங்களை பயன்படுத்தினார். அந்த எழு முக கவசங்களிலும் இனவெறி தாக்குதலுக்கு பலியான பெரோனா டெய்லர், ஜார்ஜ் ஃபிளையாட் உள்ளிட்டவர்களின் பெயர்களை அதில் பதித்திருந்தார்.

மேலும் யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்ற பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்டின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தகக்து.

மேலும் படிக்க: முழுவதுமாக இந்திய வீரர்களை களமிறக்க விரும்பும் ஸ்ரீநிதி எப் சி