‘வேலையில்லா பட்டதாரி முதல் விளையாட்டு விருது வரை’- இளைஞரின் சாதனைப் பயணம் !

Update: 2020-08-31 14:45 GMT

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் டாகா டமூட். இவர் ஒரு 27 வயது மதிக்க தக்க இளைஞர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் படித்து முடித்தப் பின்பு வேலையில்லாமல் இருந்துள்ளார். அப்படி இருந்த அவர் தற்போது தேசிய விளையாட்டு விருது பெற்றுள்ளார். அப்படி அவர் என்ன செய்தார்? எந்த விருதை பெற்றார்?

டாகா டமூட் பொறியியல் படித்தவுடன் வேலை வாய்ப்பின்றி தவித்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதுவே அவரை தற்போது தேசிய விருது வரை அழைத்து சென்றுள்ளது. இந்தச் சாதனைப் பயணம் தொடர்பாக அவர் ‘த பிரின்ட்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “நான் பொறியியல் படித்தப்பிறகு வேலையில்லாமல் இருந்தேன். எங்களது மாநிலம் மலைகள் நிறைந்த மாநிலம் என்பதால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது மலை ஏற்றத்தில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்காக தேசிய 2015ஆம் ஆண்டு நான் மலை ஏற்றம் தொடர்பாக ஒரு சிறிய பயிற்சியை மேற்கொண்டேன். அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் மலை ஏற்றத்தில் ஈடுபட தொடங்கினேன்.

2018ஆம் ஆண்டு உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழியாக ஏறினேன். மேலும் 2019ஆம் ஆண்டு ஏ.என்-32 ரக விமான விபத்து ஏற்பட்ட போது நான் மீட்புக் குழுவில் இடம்பெற்று இருந்தேன். அப்போது உயிரிழந்த 13 வீரர்களின் உடலை மீட்கவும் உதவியாக இருந்தேன்.

இந்தச் செயல்களுக்காக எனக்கு அருணாச்சலப் பிரதேச அரசு விருது வழங்கி கௌரவித்தது. தற்போது மத்திய அரசு இந்தாண்டிற்கான டென்சிங் நோர்கே விருதை எனக்கு அளித்துள்ளது. இந்த விருது என்ன என்பதே என்னுடைய கிராம மக்களுக்கு தெரியாது. எனினும் இந்த விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாம் பட்டப் படிப்பு முடித்தவுடன் உரிய வேலை கிடைக்காவிட்டால் சோர்ந்து விடுவோம். ஆனால் இந்த இளைஞர் தான் படித்தப் படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்றவுடன் பிற வழிகளை கண்டறிந்து சாதித்துள்ளார். சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு டாகா டமூட்டி ஒரு சிறந்த சான்றாக அமைகிறார்.

மேலும் படிக்க: என்னுடைய வெற்றிக்கு என் அம்மா…”- இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் இந்திய பெண்