முத்தரப்பு தொடர்: ஷாபாலி,மந்தானா அதிரடியால் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை பந்தாடி சாதனையுடன் வென்ற இந்தியா

Update: 2020-02-08 04:35 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனையான ஹீலி ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கார்ட்னர் மூனியுடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்திருந்த போது மூனி 16 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேக் லன்னிங் கார்ட்னருடன் இணைந்து ரன் வேகத்தை குறைவிடாமல் விளையாடினார். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு அதிரடியாக விளையாடி 79 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கார்ட்னர் அரைசதம் கடந்து அசத்தினார். மேக் லென்னிங் 37 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.

அதன்பின்னர் கார்ட்னர் 53 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 93 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தானா ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதலே பதம் பார்த்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். முதல் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்து அசத்தியது.

சிறப்பாக விளையாடிய ஷாபாலி வர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உதவியுடன் 49 ரன்கள் எடுத்திருந்தப் போது ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஸ்மிருதி மந்தானாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது.

பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழ்ந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மந்தானாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து ஸ்மிருதி மந்தானா தனது 11 ஆவது அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்த போது ஆட்டமிழ்ந்தார். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் இந்திய அணி டி20 போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்து சாதனைப் படைத்தது. அத்துடன் இந்த வெற்றியின் மூலம் முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தக்க வைத்தது. நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகே எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது தெரியவரும்.