'திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்'-டோக்கியோ ஒலிம்பிக் குழு

Update: 2020-02-06 14:55 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் என்று செய்திகள் பரவி வந்தன.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சீன வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பரவிய செய்திகள் உண்மையாக இருக்கும் என்று சிலர் நம்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழு இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும். கொரோனா வைரஸ் பாதிப்பு சீன தவிர இதர நாடுகளில் மிகவும் குறைவாக தான் உள்ளது. ஆகவே இது குறித்து அதிகம் கவலைப் பட தேவையில்லை.

ஏனென்றால் சீனா தவிர்த்து மற்ற நாடுகளில் வெறும் 191 கொரோனா வைரஸ் பாதிப்பு செய்திகள் மட்டுமே வெளியாகியுள்ளது. இது மிகவும் குறைவான அளவு பாதிப்பு மட்டுமே. எனவே ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக தொடங்கும்.

மேலும் ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை வெறும் 45 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ரியோவில் சிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடத்த பட்டன. அதேபோல் இம்முறையும் தகுந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 550க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 28ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச சுகாதார மையம் ஒரு அவசர நிலையாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.