ஒலிம்பிக் 3x3 கூடைப்பந்து தகுதிப் போட்டிகள் மார்ச் மாதம் பெங்களூவில் தொடக்கம்

Update: 2020-01-30 06:33 GMT

டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விளையாட்டு 3x3 கூடைப்பந்து விளையாட்டு. இதில் இரு அணியிலிருந்தும் மூன்று வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்தப் போட்டி வழக்கமான கூடைப்பந்து மைதானத்தில் ஒரு பகுதியில் மட்டுமே நடத்தப்படும்.

இந்தப் போட்டி வரும் ஒலிம்பிக்கில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிப் போட்டிகள் மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற உள்ளன. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 40 அணிகள் இடம்பெற உள்ளன.

3x3 கூடைப்பந்து (கோப்புப் படம்)

இதனை உலக கூடைப்பந்து சங்கம் மற்றும் இந்திய கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்த உள்ளது. இதுகுறித்து இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் கோவிந்தராஜ் கேம்பா ரெட்டி, "பல்வேறு நாடுகளிலிருந்து வரும் 36 அணிகளை பெங்களூருவில் வரவேற்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம். அன்மை காலங்களில் இந்தியாவில் கூடைப்பந்தின் தலைமை நகரமாக பெங்களூரு மாறியுள்ளது.

ஏனென்றால் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவில் தான் மகளீர் ஆசிய கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது மீண்டும் ஒரு சர்வதேச கூடைப்பந்து போட்டியை பெங்களூரு நடத்த உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறினார்.

இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளீர் பிரிவுகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆடவர் பிரிவில் இந்திய அணி டி பிரிவில் கனடா, நெதர்லாந்து, குரோஷியா,லாட்வியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதேபோல மகளீர் பிரிவில் இந்திய அணி, ஸ்பெயின், சீன தைபே, இத்தாலி,சுவட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதலில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதியில் ஆடவர் மற்றும் மகளீர் பிரிவுகளிலிருந்து தலா 6 அணிகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 3x3 கூடைப்பந்து போட்டிகளுக்கு ஆடவர் பிரிவில் 4 அணிகளும், மகளீர் பிரிவில் 4அணிகளும் நேரடியாக தகுதி பெற்று விட்டன. ஆடவர் பிரிவில் செர்பியா, ரஷ்யா,சீனா மற்றும் ஜப்பான் தகுதி பெற்றுள்ளன. மகளீர் பிரிவில் ரஷ்யா,சீனா,மங்கோலியா,ரூமேனியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இவை அனைத்தும் தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளாகும். ஆடவர் பிரிவில் ஜப்பான் மட்டும் போட்டியை நடத்தும் அணி என்பதால் தகுதிப் பெற்றுள்ளது. எனவே ஆடவர் பிரிவில் தரவரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி அடைந்துள்ளனர்.