கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்: கால்பந்து விளையாட்டில் தடம் பதித்த தமிழக சிங்கப்பெண்கள்

Update: 2020-03-03 08:48 GMT

பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்றன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பதக்கங்களை வென்றனர்

7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்களை சென்னை பல்கலைக்கழகம் வென்றது. இறுதி பதக்கப் பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம் 9-வது இடத்தில் நிறைவு செய்தது.

இதே போல, 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 21-வது இடத்தை பிடித்தது.

ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் பெரியார் பல்கலைக் கழகம் 40-வது இடத்தை பிடித்தது. ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் திருச்சியின் பாரதிதாசன் பல்கலைக் கழகம் 50-வது இடத்தை பிடித்தது.

குறிப்பாக, மகளிருக்கான கால்பந்து விளையாட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இறுதிப்போட்டி வரை முன்னேறின. இறுதிப்போட்டியில் அண்ணாமலை பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை மாணவிகள் போட்டியிட்டனர்

விறுவிறுப்பான இந்த போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் அண்ணாமலை பல்கலை வென்றது. இதனால், அண்ணாமலை பல்கலை மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர். மதுரை காமராஜ் பல்கலை மாணவிகள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்

ஏற்கனவே தேசிய அளவில், தமிழக மகளிர் கால்பந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதே போல, கல்லூரி பல்கலைகழக அளவிலும் கால்பந்து விளையாட்டில் தமிழக மகளிர் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிட வேண்டியதாகும்.