மகளிர் கால்பந்து லீக் - கோப்பையை 'மிஸ்' செய்த தமிழக சிங்கப்பெண்கள்

Update: 2020-02-10 12:54 GMT

2020 மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன.

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இந்தியாவில் இருந்து வெவ்வேறு அணிகள் இத்தொடரில்

பங்கேற்றுள்ளன. ‘ஏ’ க்ரூப்பில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி

அணி, சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது

இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் கோகுலம் கேரளா எஃப்.சி அணியை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில், 21-வது நிமிடத்திலேயே கேரளாவின் மனிஷா முதல் கோல் அடித்தார்.

அதனை தொடர்ந்து முதல் பாதி முடிவதற்குள் கேரளா அணியின் சபிதா பந்தாரி மற்றுமொரு

கோல் அடித்தார். இதனால், 2-0 என கேரள அணி முன்னிலை பெற்று வந்தது

நடப்பு சாம்பியனான சேது எஃப்.சி அணி இம்முறை கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் இரண்டாம் பாதியில் களமிறங்கியது. ஆனால், 83-வது நிமிடத்தில் சபிதா பந்தாரி இன்னொரு கோல் அடிக்க, 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

இதனால், தமிழக சிங்கப்பெண்கள் அரை இறுதியோடு இத்தொடரில் இருந்து வெளியேறினர். இதே போல, மற்றுமொரு அரை இறுதி போட்டியில் கிரிப்ஸா - கெங்ரே எஃப்.சி அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் கிரிப்ஸா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது

2020 மகளிர் கால்பந்து லீகின் இறுதி போட்டியில் கேரளா கோகுலம் எஃப்.சி - கிரிப்ஸா

அணிகள் மோதுகின்றன

கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி அணி – மணிப்பூர் போலீஸ் அணிகள்

இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் சேது எஃப்.சி அணி அதிரடியாக வெற்றி பெற்று சாம்பியன்

பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.