போட்டிகள் இல்லாததால் திடீரென ஓய்வை அறிவித்த இந்திய கைப்பந்து வீராங்கனைகள்

Update: 2020-08-09 15:07 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அத்துடன் விளையாட்டு பயிற்சியாளர்களும் வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய மகளிர் கைப்பந்து அணியின் வீராங்கனைகள் மூன்று பேர் திடீரென தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். இந்திய மகளிர் கைப்பந்து அணியில் கேரளாவை சேர்ந்த ரேகா, ரூக்சனா மற்றும் ஃபாத்திமா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கூட்டாக தங்களது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இவர்கள் மூவரும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், “நாங்கள் மூவரும் கடந்த ஓராண்டாக ஓய்வு குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு மீண்டும் கைப்பந்து போட்டிகள் நடைபெறும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆகவே நாங்கள் மூவரும் கைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

வீராங்கனை ரேகா

இதுகுறித்து மேலும் ரூக்சனா கூறுகையில், “எந்த ஒரு போட்டியும் இல்லாத சூழ்நிலையில் நாங்கள் எதற்காக காத்திருக்க வேண்டும். அத்துடன் ஆடவர்களுக்கு கிடைக்கும் மற்ற வாய்ப்பை போல் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் கிடைப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.

வசிக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்த கூட முடியாமல் தவிக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை

இந்திய மகளிர் கைப்பந்து அணி கடந்த ஆண்டு வெறும் நான்கு தொடர்களில் மட்டுமே பங்கேற்றது. இதுமிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொடர்களே ஆகும். அத்துடன் உள்ளூர் தொடர்களும் பெண்கள் பிரிவில் மிகவும் குறைந்த அளவில் நடத்தப்பட்டது. இதனால் பெண்கள் அணியை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பிற வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்திய மகளிர் கைப்பந்து அணி (கோப்பு படம்)

ரேகா, ரூக்சனா மற்றும் ஃபாத்திமா ஆகிய மூவருக்கும் கேரள மின்சாரத்துறையில் பணியில் உள்ளனர். இனி இவர்கள் மூவரும் அங்கு தங்களது பணியை தொடர உள்ளனர். ரேகா கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் கைப்பந்து அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர்கள் மூவரும் கேரளா மாநில அணிக்கும் மிகவும் முக்கியமானவர்களாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையில் ஆடவர்களுக்கு நிகராக மகளிருக்கு தொடர்கள் இருப்பதில்லை என்ற குற்றாச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் ஆராய்ந்து பெண்களுக்கும் அதிக தொடர்கள் நடத்த வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.