ஒலிம்பிக் வீரர்களை உற்சாக படுத்த நண்பர்களின் கொச்சி டூ டோக்கியோ சைக்கிள் பயணம்

Update: 2020-02-12 03:14 GMT

பயணங்கள் எப்போது நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவங்களை தரும். அந்த வகையில் இந்த மூன்று நண்பர்கள் தேர்வு செய்துள்ள பயணமே ஒரு வித்தியாசமான ஒன்று. கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹசீப் அஷ்னான், டோனா ஜேக்கப், கிளிஃபின் ஃபிரான்சிஸ் என்ற நண்பர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நேரில் காண திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் திட்டமிட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று இவர்கள் மூவரும் சைக்கிள் மூலம் கொச்சியிலிருந்து டோக்கியோ வரை பயணம் செல்ல வேண்டும் என்பது தான். மேலும் இவர்கள் மூவரும் வழி நெடுகில் மக்களிடம் இந்திய வீரர்களுக்கு அவர்களது வாழ்த்து செய்திகளையும் பெற்று வருகின்றன. இந்த வாழ்த்துகளை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடம் அளிக்க உள்ளனர்.

ஹசீப் அஷ்னான், ஃபிரான்சிஸ், டோனா ஜேக்கப்

இவர்கள் மூவரும் ' தி பிரிட்ஜ்' ஆங்கில தளத்திற்கு ஒரு பிரத்யேக நேர்காணலை அளித்துள்ளனர். அதில், "எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை உற்சாகபடுத்துவது தான். அத்துடன் மக்களுடைய வாழ்த்துகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணம் குறித்து ஃபிரான்சிஸ், "நானும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைக்கு சைக்கிள் மூலம் பயணம் செய்து போட்டிகளை கண்டு ரசித்தேன். அப்போது அங்கு வந்த எனது கல்லூரி நண்பன் அஷ்னான் இடம் என்னுடைய டோக்கிய ஒலிம்பிக் சைக்கிள் பயணத்தை பற்றி கூறினேன். அதற்கு அவரும் என்னுடன் இணைகிறேன் என்று ஒப்புதல் அளித்தார்.

டோனா ஜேக்கப்

மேலும் எங்களுடைய மற்றொரு கல்லூரி தோழியான டோனா ஜேக்கபும் எங்களுடன் ஒலிம்பிக் சைக்கிள் பயணத்திற்கு வர ஒப்புக் கொண்டார். ஆகவே நாங்கள் நான்கு பேரும் இந்தப் பயணத்தை தொடர்ந்து உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இப்பயணம் குறித்து இளம் பெண் டோனா ஜேக்கப், "பொதுவாக இதுபோன்ற பயணங்கள் பெண்களுக்கு சவாலாக இருக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு இதுவரை எந்தவித சவாலும் பெரிதாக தெரியவில்லை. இந்திய பெண்கள் தங்களின் பாதுகாப்பு கருதி வெளியே செல்வதை தவிர்க்கின்றனர். ஆனால் அவர்கள் அந்தப் பயத்தை விட்டு தைரியமாக வெளியே வந்து உலகை சுற்றி பார்த்து இயற்கையை ரசிக்க வேண்டும்.

மேலும் இந்தப் பயணத்தின் மூலம் நான் சந்திக்கும் பெண்களிடையே மாதவிடாய் காலங்களில் மென்சூரல் கப் பயன்படுத்த விழிப்புணர்வு செய்யப் போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். டோனியா ஜேக்கப் ஏற்கெனவே 28 நாட்கள் கியூபா முழுவதும் 1000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை இவர்கள் ஊக்குவிக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் 8 நாடுகளை கடந்து 10ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக 240 நாட்கள் பயணம் செய்ய உள்ளனர்.