ஸ்பிரிட் ஆஃப் த கேம் விருதை எதற்காக தோனி வென்றார் தெரியுமா? - வீடியோ

Update: 2020-12-28 10:48 GMT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட விருதுகளை அளித்து வருகிறது. இதற்காக தனது வலைத்தளத்தில் இணையதள வாக்கெடுப்பும் நடத்தியது. அதில் கிட்டதட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு மேல் பங்கேற்று தங்களின் வாக்குகளை அளித்தனர். இந்நிலையில் இன்று அந்த விருதுகளின் முடிவை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தத் தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல ‘தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் த கேம்’ விருதை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். இந்த விருது இவருக்கு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் இயன் பெல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ஆனால் அவர் தேநீர் இடைவேளைக்கு அவர் சென்றதாக முறையிட்டார். அவருக்கு ஆதரவாக மைதானத்திலிருந்த ரசிகர்களும் சத்தம் எழுப்ப தொடங்கினர். அத்துடன் இந்திய அணி வீரர்கள் தேநீர் இடைவேளைக்கு செல்லும் போது இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். எனினும் தேநீர் இடைவேளைக்கு பின் இயன் பெல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார்.

தேநீர் இடைவேளையின் போது இந்திய வீரர்கள் செய்த விக்கெட் அப்பீலை திரும்ப பெறுவதாக இந்திய கேப்டன் தோனி நடுவர்கள் இடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் இயன் பெல் பேட்டிங் செய்ய வந்தார். இதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று இந்திய கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களை பாராட்டினர். தோனியின் இந்தச் செயலை பலரும் பாராட்டினர். தற்போது இந்தத் தருணத்தை ஐசிசியும் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!