ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த கிரிக்கெட் வீராங்கனை - வீடியோ

Update: 2020-02-25 16:51 GMT

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகளிருக்கான U-19 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்து சண்டிகர் கேப்டன் கஷ்வி அசத்தியுள்ளார்.

டாஸ் வென்ற சண்டிகர் கேப்டன் கஷ்வி கவுதம், பேட்டிங் தேUசர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் 50 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு சண்டிகர் அணி 186 ரன்கள் எடுத்தது. இதில், கேப்டன் கஷ்வி 49 ரன்கள் எடுத்திருந்தார்.

இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வேகப்பந்து வீச்சாளரான சண்டிகர் அணி கேப்டன் கஷ்வி, இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தினார்.

அவர் வீசிய 4.5 ஓவர்களில், வெறும் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதில், ஒரு ஹாட்-ட்ரிக் அடங்கும்!

[embed]https://twitter.com/BCCIWomen/status/1232275287557042176[/embed]

இன்றைய போட்டியில் அவர் எடுத்த 10 விக்கெட்டுகளில், 4 பவுல்டாகியும், 6 எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டும் பேட்ஸ்வுமன்கள் வெளியேறினார்கள். அருணாச்சல பிரதேச பேட்ஸ்வுமன்கள் பலர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்

இதனால், வெறும் 25 ரன்களுக்கு அருணாச்சல பிரதேச அணி ஆல்-அவுட்டானது. கஷ்வியின் பவுலிங்கால் 161 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டி மட்டுமல்லாது, ஏற்கனவே இந்த தொடரிலும் கஷ்வி கலக்கி வருகிறார். இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு, ஜம்மு கஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கஷ்வியின் அசத்தலான பவுலிங்கை பாராட்டி சமூக வலைதளம் கொண்டாடி வருகிறது.