‘டீ கடை முதல் பாராலிம்பிக் சாம்பியன் வரை’ ஒரு மாற்றுதிறனாளியின் தன்னம்பிக்கை பயணம்

Update: 2020-09-22 07:26 GMT

கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால், இவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவருடைய தந்தையும் இறந்துவிட அவருக்கு வாழ்க்கை மிகவும் சோகமானதாக மாறியது. தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

தனக்கு கிடைத்த கூலி வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். எனினும் அவருக்கு சிறு வயது முதல் விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதனால் பாரா பேட்மிண்டன் விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளார்.

இவரின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் ராமசந்திரா மஞ்சுநாத்தை பாரா தடகளம் விளையாட்டில் கவனம் செலுத்த அறிவுரை அளித்துள்ளார். அதன்பின்னர் அவர் தடகள விளையாட்டில் இறங்கி பல பதக்கங்களை வென்றுள்ளார். தனது வாழ்க்கை பயணம் குறித்து ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “நான் முதலில் பேட்மிண்டன் பயிற்சிக்கு சென்றேன். அப்போது என்னை பார்த்த பயிற்சியாளர் ராமசந்திரா தடகளத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார். அவரின் அறிவுரையை ஏற்று நான் ஈட்டி எறிதலில் பங்கேற்க தொடங்கினேன். முதலில் என்னால் வெறும் 6 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. அதன்பின்னர் தீவிர பயிற்சியால் 16 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிய தொடங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மஞ்சுநாத் இதுவரை 15 மாநில அளவிலான பதக்கங்களையும், 12 தேசிய பாராலிம்பிக் பதக்கங்களையும், 5 சர்வதேச அளவிலான பதக்கங்களையும் வென்றுள்ளார். தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மஞ்சுநாத் ஒரு நல்ல சான்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘மை கொவிட் ஹீரோஸ்’ ஜெர்ஸியுடன் களமிறங்கும் கோலியின் ஆர்.சி.பி