மகாராஷ்டிரா ஓபன்: சொந்த மண்ணில் கடைசித் தொடரில் களமிறங்கும் பயஸ்

Update: 2020-02-02 03:12 GMT

டாட்டா மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரும் நாளை முதல் 9ஆம் தேதி வரை புனேவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடர் இதுவே ஆகும்.

இந்தத் தொடர் முதல் முறையாக 1996ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதலில் இத் தொடர் டெல்லியில் நடைபெற்றது. பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னை ஓபன் என்று நடைபெற்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு இது புனேவிற்கு மாற்றப்பட்டு மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயரை பெற்றது.

இந்தாண்டு நடைபெற உள்ள டாட்டா ஓபன் தொடரின் ஒற்றையர் பிரிவு பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகல், ஶ்ரீகாந்த முகுந்த், ராம்குமார் ராம்நாதன் உள்ளிட்டோர் களமிறங்கின்றனர். இவர்களுடன் பிரான்சு வீரர் பியோனட் பியர், செடஃபனோ டரவாக்லியா, இவோ கார்லோவிக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண்-ஆர்டெம் சிட்டாக் இணை நேரடியாக விளையாட தகுதிப் பெற்றது. ரோகன் போப்பண்ணா-அர்ஜூன் காதே ஜோடிக்கு வைல்ட் கார்டு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு உடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜாம்பவான் வீரர் லியாண்டர் பயஸ் இந்தத் தொடருக்கு வைல்ட் கார்டு மூலம் தகுதிப் பெற்றுள்ளார்.

லியாண்டர் பயஸ் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் மார்டின் எப்டன் உடன் ஜோடி சேர்ந்து விளையாட உள்ளார். இந்த டென்னிஸ் தொடரில் அதிக முறை இரட்டையர் பட்டத்தை வென்றவர் லியாண்டர் பயஸ் தான். பயஸ் இத் தொடரில் 6 முறை இரட்டையர் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

பயஸ்-எப்டன் இணை தனது முதல் போட்டியில் பலம் வாயந்த திவிஜ் சரண்-ஆர்டெம் சிட்டாக் இணையை எதிர்கொள்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டாட்டா ஓபனில் இரட்டையர் பிரிவில் போப்பண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இம்முறை இவர்கள் இருவரும் தனியாக பிரிந்து வேறு ஜோடியுடன் களமிறங்க உள்ளனர்.

30 ஆண்டு காலம் டென்னிஸ் வாழ்க்கையை இந்த ஆண்டு உடன் பயஸ் முடிக்க உள்ளார். எனவே சொந்த மண்ணில் கடைசியாக களமிறங்கும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று டென்னிஸ் போட்டிக்கு ஒரு தகுந்த பிரியாவிடையை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-ஓஸ்டெபென்கோ இணை இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.