மகாராஷ்டிரா ஓபன்: பயஸ் ஜோடியை தோற்கடித்து ராமநாதன் இணை அரையிறுதிக்கு தகுதி

Update: 2020-02-07 00:46 GMT

இந்தியாவின் ஒரே ஏடிபி தொடரான மகாராஷ்டிரா ஓபன் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ்- எப்டன் ஜோடி இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-பூரவ் ராஜா இணையை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய ஜோடியான ராம்குமார் ராமநாதன்-பூரவ் ராஜா இணை ஆதிக்கம் செலுத்தியது. முதல் செட்டை எளிதாக 6-2 என்ற கணக்கில் இந்த ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டையும் இந்த ஜோடி 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியது.

பயஸ்-எப்டன் ஜோடி

இறுதியில் 6-2,6-1 என்ற நேர் செட்களில் ராம்குமார் ராமநாதன்-பூரவ் ராஜா இணை லியாண்டர் பயஸ்-எப்டன் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கொரியாவின் சுன்வோ குவானிடம் 3-6,6-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். எனவே மகாராஷ்டிரா ஓபனில் தற்போது களத்தில் இருப்பது ராம்குமார்-ராமநாதன் மற்றும் பூரவ் ராஜா இணை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ஓபனில் பயஸ்:

இந்த ஆண்டு உடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பயஸிற்கு மகாராஷ்டிரா ஓபன் கடைசி ஏடிபி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வரும் 10ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கும் பெங்களூரு ஓபனில் லியாண்டர் பயஸ் களமிறங்க உள்ளார். எனவே பெங்களூரு ஓபன் தான் லியாண்டர் பயஸிற்கு இந்தியாவில் கடைசி டென்னிஸ் தொடராக அமையும்.

கடைசியாக ஒரு முறை டேவிஸ் கோப்பை அணியில் பயஸ்:

இந்திய அணி டேவிஸ் கோப்பை தொடர் டென்னிஸ் போட்டியில் கோராஷியா அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அனுபவ வீரரான லியாண்டர் பயஸ் இடம்பெற்றுள்ளார். இது டேவிஸ் கோப்பை தொடரில் பயஸ் பங்கேற்கும் கடைசி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேவிஸ் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை பயஸ் தன்வசம் வைத்துள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்று வரும் லியாண்டர் பயஸ் இதுவரை 44 இரட்டையர் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.