தமிழ்நாட்டை சேர்ந்த 17வயது சிறுவன் உலக ஆன்லைன் ஓபன் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்!

Update: 2020-09-04 02:02 GMT

உலக ஆன்லைன் ஓபன் செஸ் போட்டி தொடரில் தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 122 கிராண்ட்மாஸ்டர் வீரர்கள் விளையாடினர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இனியன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்தத் தொடரில் இனியன் மொத்தமாக 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருடன் இணைந்து ரஷ்யாவின் சன்னனும் 7.5 புள்ளிகளை எடுத்தார். எனினும் சன்னனைவிட இனியன் அதிக டைபிரேக்கர் ஸ்கோர் வைத்திருந்ததால் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா நேரத்தின்படி நடைபெற்றன. இதனால் போட்டிகள் தினமும் இரவு 9.30 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தொடருக்கான ஒரு மாதம் இனியன் தினமும் இரவு நேரத்தில் செஸ் விளையாடி பயிற்சி எடுத்துள்ளார். அதன்விளைவாக இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களை இனியன் தோற்கடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக ஜார்ஜியா கிராண்ட் மாஸ்டர் பாடூர் ஜோபாவா, சாம் செவியன் ஆகியோரை இனியன் தோற்கடித்து அசத்தினார்.

கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இனியன் அண்மையில் ஊரடங்கு காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டினார். இவர் மே மாதம் 78 மணி நேரம் தொடர்ச்சியாக ஆன்லைனில் செஸ் விளையாடி கிட்டதட்ட 1,21,199 ரூபாயை திரட்டினர். அத்துடன் தனது சொந்த சேமிப்பிலிருந்து 20 ஆயிரம் ரூபாயையும் கொரோனா பாதிப்பு பணிகளுக்கு நிவாரணமாக அளித்தார். இவருடைய இந்த முயற்சியை பலரும் பாராட்டி இருந்தனர்.

தற்போது இனியன் ஆன்லைன் ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று மீண்டும் அனைவரின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

மேலும் படிக்க: தீபக் புனியா உட்பட மூன்று மல்யுத்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி