தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரைக்கு பத்மஶ்ரீ விருது!

Update: 2021-01-25 16:22 GMT

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உட்பட 7 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை உட்பட 7 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மவுமா தாஸ், தடகள வீராங்கனை சுதா ஹரி சிங், மாதவ் நம்பியார், பாராலிம்பிக் வீரர் வெங்கடேஷ், மலை ஏற்றம் வீராங்கனை அன்ஷூ ஜம்சென்பா, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் ஆகியவர்களுக்கு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த அனிதா பால்துரை 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார். கிட்டதட்ட 18 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக இவர் களமிறங்கி சாதித்துள்ளார். இவர் 18 வயதில் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்றார். இந்திய அணிக்கு தலைமை தாங்கிய இளம் வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்தார்.

மேலும் 8 ஆண்டுகள் இந்திய கூடைப்பந்து அணிக்கு இவர் கேப்டனாக இருந்தார். அத்துடன் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் 30 பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 9 முறை ஆசிய கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய ஒரே வீராங்கனை இவர் தான். இத்தகைய சிறப்பு மிக்க அனிதா பால்துரைக்கு பத்மஶ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரேஸ்சிங் மன்னன் நரேன் கார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?