சீனாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் உலகக்கோப்பையில் சரத் கமல், சத்யன் பங்கேற்பதில் சிக்கல்?

Update: 2020-09-11 14:13 GMT

உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் சீனாவின் வேஹை நகரில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் ஐடிடிஎஃப் ஃபைனல்ஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய வீரர்கள் சரத் கமல், சத்யன் ரிசர்வ் வீரரகளாக இடம்பெற உள்ளனர்.

இந்தத் தொடர்கள் சீனாவில் நடைபெற உள்ளதால் பல வீரர்கள் தொடரில் பங்கேற்கபோவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ரிசர்வ் பட்டியில் சத்யன், சரத் கமல் ஆகிய இருவரும் இடம்பெற்று இருந்தால் அவர்களுக்கு தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

எனினும் இந்த இரண்டு தொடர்களுக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியல் இன்னும் வெளிவரவில்லை. இதுதொடர்பாக இந்திய வீரர் சரத் கமல் ஐடிடிஎஃப் அமைப்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஐடிடிஎஃப் இன்னும் பதிலளிக்கவில்லை.

இதனால் இவர்கள் இருவரும் ரிசர்வ் பட்டியலில் இருப்பார்களா என்பதில் குழப்பம் அதிகரித்துள்ளது. அத்துடன் அவர்கள் ஒருவேளை பட்டியலில் இடம்பெற்றால் எவ்வாறு சீனா செல்வது என்பதிலும் அடுத்த சிக்கலாகவிடும். ஏனென்றால் தற்போது இந்தியா-சீனா இடையயே விமான போக்குவரத்து இல்லை.

மேலும் இந்தியா-சீனா நாடுகளிடையே எல்லை பிரச்னையும் நடைபெற்று வருகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் சீனா விசா கிடைப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. இதனால் விசா பிரச்னையுடன் சேர்த்து பயண பிரச்னையும் இவர்களுக்கு அடுத்த சிக்கலாக அமையும்.

இந்தச் சிக்கல்களுக்கு உரிய விடை தெரிய வேண்டுமென்றால் அதற்கு முதலில் ரிசர்வ் பட்டியல் வெளி வரவேண்டும். அதன்பின்னர் சரத் கமல் மற்றும் சத்யன் சீனா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்த உலகக் கோப்பை தொடர் சிறப்பான பயிற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “ஒலிம்பிக் போட்டிகளில் விரைவில் கபடி இடம்பெறும்”-இந்திய கபடி கேப்டன்