டேபிள் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் டாப்-20ல் தமிழகத்தின் சரத் கமல்-சத்யன் ஜோடி 

Update: 2020-03-08 02:27 GMT

டேபிள் டென்னிஸ் என்றவுடன் அனைவருக்கும் பரிட்சயமான இரண்டு நபர்கள் சரத் கமல் மற்றும் சத்யன் தான். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்கு ஒரு கூடுதல் பெருமையாகும். இவர்கள் சமீபத்தில் ஜோடி சேர்ந்து ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்கள்.

அதன்காரணமாக தற்போது வெளியாகியுள்ள டேபிள் டென்னிஸ் உலக தரவரிசையில் இவர்கள் இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். சரத் கமல்-சத்யன் ஜோடி 20 இடங்கள் முன்னேறி தற்போது 17ஆவது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் முதல் முறையாக டாப் 20 இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தோனி அமல்ராஜ்

அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் மற்றொரு தமிழக வீரரான அந்தோனி அமல் ராஜ் முதல் முறையாக டாப் 100க்குள் நுழைந்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி 98ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரில் அந்தோனி அமல்ராஜ் பிரதான சுற்று வரை தகுதிப் பெற்று அசத்தினார். இதன்காரணமாக அவரும் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்யன்(31), சரத் கமல்(38), ஹர்மித் தேசாய்(87) ஆகிய இடத்தை பிடித்துள்ளனர். இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் வீரராக சத்யன் தொடர்கிறார். இரண்டாவது இடத்தில் சரத் கமல் உள்ளார். மேலும் முதல் 100 இடங்களுக்குள் மூன்று தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுடிர்தா முகர்ஜி

மகளிர் ஒற்றையர் பிரிவில் சுடிர்தா முகர்ஜி 51 இடங்கள் முன்னேறி 109ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இவர் மகளிர் பிரிவில் இந்தியாவின் இரண்டாவது வீராங்கனையாக உள்ளார். இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக மோனிகா பட்ரா தொடர்கிறார். இவர் 5 இடங்கள் முன்னேறி 62ஆவது இடத்தில் உள்ளார்.