மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூஸி.க்கு எதிராக மிடில் ஆர்டர் சொதப்பலால் இந்திய அணி 133 ரன்கள் குவிப்பு

Update: 2020-02-27 05:28 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மெல்பேர்ன் மைதானத்தில் விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் காய்ச்சால் காரணமாக இடம்பெறாத ஸ்மிருதி மந்தானா இப்போட்டியில் மீண்டும் களமிறங்கினார். எனவே மந்தானா-ஷபாலி வர்மா தொடக்க வீராங்கனைகளாக இந்திய அணியில் களமிறங்கினர்.

ஸ்மிருதி மந்தானா வெறும் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். எனினும் ஷபாலி வர்மா வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் 3ஆவது இடத்தில் களமிறங்கிய தானியா பாட்டியாவும் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

இதன்காரணமாக இந்திய அணி 6 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது. பின்னர் தானியா பாட்டியா 25 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா கொடுத்த இரண்டு கேட்ச்களை நியூசிலாந்து வீராங்கனைகள் தவறவிட்டனர். இதனால் இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 74 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9பந்துகளில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து ஹர்மன்பிரீத் கவுர் 2, வேதா ஷபாலி வர்மா 46, கிருஷ்ணமூர்த்தி 6 மற்றும் தீப்தி சர்மா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் மிகவும் குறைந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 46 ரன்கள் எடுத்தார்.