மகளிர் டி20 உலகக் கோப்பை: பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி 142 ரன்கள் குவிப்பு

Update: 2020-02-24 12:37 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காய்ச்சல் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தானா இடம்பெறவில்லை. இவருக்குப் பதில் ரிச்சா கோஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தானியா பாட்டியா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் ஜெமிமாவுடன் ஜோடி சேர்ந்த ஷபாலி வர்மா பங்களாதேஷ் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா சந்தித்த முதல் 8 பந்துகளில் 3 சிக்சர்கள் விளாசினார். 17 பந்தில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளின் உதவியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து இம்முறையும் ஏமாற்றினார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்தது. 10ஆவது ஓவருக்கு பிறகு இந்திய வீராங்கனைகள் பவுண்டரி எதுவும் அடிக்காததால் ரன் விகிதம் சற்று குறைந்தது.

13ஆவது ஓவரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் துர்தஸ்டவசமாக ரன் அவுட் ஆகினார். அவர் 37 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 34 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்டத்தின் வேகம் இன்னும் குறைந்தது. எனினும் அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 15ஆவது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்தார். இதன்காரணமாக 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 2 பவுண்டரிகளின் உதவியுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தீப்தி சர்மாவும் 10 ரன்களுடன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அனுபவம் வாய்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தியின் அதிரடி ஆட்டம் கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு நல்ல பக்க பலமாக அமைந்தது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 39, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, வேதா கிருஷ்ணமூர்த்தி 20 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் சார்பில் சல்மா கட்டூன் மற்றும் பன்னா கோஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.