மகளிர் டி20 உலகக் கோப்பை: வாட்கின்ஸ் அதிரடி முதல் ஹர்மன்பிரீத் சதம் வரை இந்தியா vs நியூஸி. ஃபிளாஷ் பேக்  

Update: 2020-02-26 13:28 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய மகளிர் அணி பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தச் சூழலில் இதுவரை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளை சற்று திரும்பி பார்க்கலாம்.

2009 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி:

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அப்போது இந்திய அணி நியூசிலாந்து அணியை அரையிறுதிப் போட்டியில் சந்தித்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி வாட்கின்ஸின் அதிரடியால் 145 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் பேட்டிங்கில் சொதப்பினர். மித்தாலி ராஜ்(20), அஞ்சும் சோப்ரா(15) மற்றும் அமிதா சர்மா(24) ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் வெறும் 93 ரன்கள் எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

2010- டி20 உலகக் கோப்பை குரூப் போட்டி:

இரண்டாவது டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன. எனவே இந்த இரு அணிகளும் குரூப் போட்டியில் விளையாடின. அதில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் டயானா டேவிட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மித்தாலி ராஜின்(44) சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் வந்தது. எனினும் மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மீண்டும் தோல்வி அடைந்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2018 டி20 உலகக் கோப்பை குரூப் போட்டி:

டி20 உலகக் கோப்பைகளில் 2 இரண்டு முறை நியூசிலாந்துடன் மோதி தோல்வி அடைந்த இந்திய அணி, மீண்டும் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் மோதியது. இம்முறையும் இரு அணிகளும் ஒரே குரூப்பில் இடம் பெற்று இருந்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி காட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 45 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். அதிரடி காட்டிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளின் உதவியுடன் 103 ரன்கள் விளாசினார்.

அத்துடன் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். மேலும் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. இந்திய அணி அதனை முறியடித்தது.

இதன்பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி பூனம் யாதவ் மற்றும் தயாலன் ஹேமலாதா பந்துவீச்சில் விக்கெட்களை இழந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் மட்டும் 67 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முறையாக இந்திய அணி நியூசிலாந்து அணியை டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தியது.

இதுவரை டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி ஒரு முறையும் நியூசிலாந்து அணி இரண்டு முறையும் வென்றுள்ளது. ஆகவே நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று இந்த கணக்கை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.