‘கப் முக்கியம் பிகிலு’- தினேஷ் கார்த்திக் பயன்படுத்திய ட்ரம்ப் கார்டு மணிமாறன் சித்தார்த் - யார் இவர்?

Update: 2021-02-01 02:46 GMT

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது. கடைசியாக 2007ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது. தற்போது 14ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழ்நாட்டு இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் மணிமாறன் சித்தார்த் களமிறங்கி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார். தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். யார் இந்த மணிமாறன் சித்தார்த்?

தமிழ்நாட்டில் பிறந்த மணிமாறன் சித்தார்த் தனது சிறுவயதில் தந்தையின் பணி காரணமாக இந்தோனேஷியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு தனது தந்தை கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவரும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னர் இவரின் திறமையை பார்த்த இவரது தந்தை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

தந்தையின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு திரும்பிய இவர் யு-14 தமிழ்நாடு அணியில் வாய்ப்பு பெற்றார். அதில் சிறப்பாக விளையாடினார். அதன்பிறகு தனது தீவிர முயற்சியினால் டிஎன்பில் தொடரில் இவர் இடம்பிடித்தார். முதலில் லைகா கோவை கிங்ஸ் அணியில் இவர் களமிறங்கினார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் இவர் இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் இவர் தமிழ்நாடு டி20 அணியில் இடம்பெற்றார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் இவர் முதல் முறையாக மும்பை அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டும், மூன்றாவது போட்டியில் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அடுத்த இரண்டு போட்டிகளில் இவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இதனால் இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் இவருக்கு லீக் சுற்று போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கிறிஸ்ட் அதிகமாக ரன் வழங்கி வந்ததால் இறுதிப் போட்டியில் அவருக்கு பதிலாக மணிமாறன் சித்தார்த் களமிறங்கினார்.

நேற்றைய போட்டியிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சித்தார்த் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவர் தமிழ்நாடு அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறினார். கடந்த ஐபிஎல் தொடரில் இவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. எனினும் இம்முறை அவரை வெளியே விட்டுள்ளது. இதனால் இம்மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கிரிக்கெட்டிற்காக ஒலிம்பிக் போட்டியை தவறவிட்ட கோபாலன்!