‘மறைந்த என் அம்மாவிற்கு இந்தக் கோப்பை சமர்ப்பணம்’ - முருகன் அஸ்வின் உருக்கம்

Update: 2021-02-02 03:23 GMT

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரை தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடம்பிடித்தவர் முருகன் அஸ்வின். இவர் 8 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை செய்துள்ளார். அதில், “ஒரு மாதத்திற்கு முன்பாக என்னுடைய தாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவர் எப்போதும் கிரிக்கெட் மீது அதிகமான ஆர்வத்துடன் இருந்தார். அவருடைய தூண்டுதலின் காரணமாக தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர் பல நேரங்கள் என்னுடன் செலவு செய்தார். எனக்கு பந்துகள் வாங்கிக் கொடுப்பதிலிருந்து பயிற்சிக்கு அழைத்து செல்வது வரை ஆகிய அனைத்தையும் என் தாய் பார்த்து கொண்டார். இவற்றுடன் சேர்ந்து தினமும் அவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து சமைத்துவிட்டு 7 மணிக்கு பணி சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்புவார். இந்தக் கடுமையான பணி சுமையிலும் அவர் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு முக்கிய பங்காக இருந்தார். என்னுடைய முதல் ரசிகர்கரும் விமர்சகரும் அவர் தான்.

சையத் முஷ்டாக் அலி தொடருக்காக நான் தயாராகும் போது அம்மாவின் மரணம் நிகழ்ந்தது என்னை பெரிய குழப்பத்திற்கு தள்ளியது. 13 நாட்கள் அம்மாவிற்கு செய்யவேண்டிய சடங்குகள் அனைத்தும் இருந்தன. அந்த நேரத்தில் என்னுடைய தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினர். ஏனென்றால் என்னுடைய அம்மாவும் அதேயே தான் விரும்பியிருப்பார் என்று அவர்கள் கூறினர். அதனை ஏற்று நான் இந்தத் தொடருக்கு கிளம்பினேன்.

சையத் முஷ்டாக் அலி தொடரை நாங்கள் வென்றதையும், நான் அதிக விக்கெட் வீழ்த்தியதையும் அம்மா இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார். எப்போதும் நான் விளையாட செல்லும் போது அம்மாவை என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான் செல்வேன். அப்போது தான் என்னால் சிறப்பாக விளையாட முடியும். இந்தக் கோப்பை என்னுடைய அம்மாவிற்கு சமர்ப்பணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தனது கிராமத்திற்கு ரயில் நிலையம் வாங்கி தந்த இந்தியாவின் முதல் பளுத் தூக்குதல் சாம்பியன் ஏகாம்பரம்!