ஃபிஃபா 17வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய பெண்கள் அணியில் இடம்பெற்று இருக்கும் சிறுமி தான் சுமதி குமாரி. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா பகுதியைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த 6ஆவது குழந்தை தான் சுமதி குமாரி.
இவரின் கிராமத்தில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை பார்த்தவுடன் சுமதிக்கும் கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இதற்கு சுமதியின் பெற்றோர், "ஆண்களால் கால்பந்து விளையாட முடியும் என்றால் பெண்களாலும் அதனை விளையாட முடியும்” எனக் கூறி, சுமதிக்கு ஊக்கம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு சுமதி கால்பந்து விளையாட தொடங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில அணிக்கு இவர் தேர்வாகியுள்ளார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு இவருக்கு 15வயதுக்குட் பட்டோருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அணி தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக தயாராக இருந்தது. அந்த சமயத்தில் துரதிஷ்டவசமாக சுமதியின் தாய் உடல்நலை குறைவால் காலமாகிவிட்டார். இதனால் சுமதி தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. எனினும் தனது குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு, தான் கால்பந்து விளையாடினால் தான் தனது குடும்பம் முன்னேற முடியும் என்ற முடிவை எடுத்தார். இதனால் அந்தத் தொடரில் பங்கேற்றார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய சுமதி இரண்டு கோல்கள் அடித்தார். அத்துடன் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். இந்தத் தொடருக்கு பின், “ இத்தொடரை வென்றதால் என்னுடைய தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்" என்று சுமதி கூறியிருந்தார். அத்துடன் தான் எப்போதும் களத்தில் இறங்கும் போது என்னுடைய தாயையும் அவர் செய்த தியாகங்களையும் தான் மனதில் நினைப்பேன் என்றும் சுமதி கூறியிருந்தார். இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் இதேபோன்று சுமதி குமாரி சாதிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி களமிறங்குவதால், அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதனை ஈடு செய்யும் விதத்தில் இந்திய சிறுமிகள் அசுத்துவார்கள் என்று நம்புவோம். குடும்ப வறுமையை பார்த்து சிலர் தவித்து கொண்டிருக்கும் போது சுமதி மட்டும் தனது வறுமையை போக்குவதற்கான வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் அந்த வழியில் மிகவும் உறுதியுடனும் உத்வேகத்துடனும் சுமதி பயணித்து வருகிறார். அவரின் வெற்றிப் பயணம் தொடர நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்.