டக் ஆஃப் வார், பாராலிம்பிக், மல்லாகம்ப், வுஷூ உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு மத்திய அரசு வேலை !

Update: 2020-09-03 01:34 GMT

மத்திய அரசு விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' மூலம் அரசு பணியை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கோட்டாவில் மேலும் டக் ஆஃப் வார், பாராலிம்பிக், மல்லாகம்ப், வுஷூ உள்ளிட்ட 20 விளையாட்டுகளை மத்திய அரசு சேர்த்துள்ளது.

இதற்காக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மத்திய பணியாளர் துறைக்கு பரிந்துரை செய்ததிருந்தது. இந்தப் பரிந்துரையை மத்திய பணியாளர் துறை ஏற்றுள்ளது. அதன்படி தற்போது இருக்கும் விளையாட்டுகளுடன் புதிதாக 20 விளையாட்டுகள் சேர்க்கப் பட்டுள்ளன. இதில் குறிப்பாக பழைமையான விளையாட்டான மல்லாகம்ப் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் பாராலிம்பிக், டக் ஆஃப் வார், வுஷு, சாஃப்ட் பால், பேஸ்பால், பாடி பில்டிங், ஃபென்சிங், சைக்கிளிங் போலோ, மோட்டார் ஸ்போர்ட்ஸ், ரக்பி, செப்க்ட்ரா, ட்ரையத்லான், நெட் பால், டென்பின் பவுலிங் உள்ளிட்ட போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த முடிவு குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "விளையாட்டு வீரர்களின் நலன் மீதே அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. புதிதாக சேர்க்கப் பட்டுள்ள விளையாட்டுகளால் பல வீரர் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி கிடைக்கும். அத்துடன் இது மக்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தையும் அதிகரிக்கும். அது விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த முடிவு அதனைக் கருத்தில் கொண்டுதான் எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 43 விளையாட்டுகள் ஸ்போர்ட்ஸ் கோட்டா பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தற்போது அதில் மேலும் 20 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடைசியாக இந்தப் பட்டியல் 2013ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அதற்குபின் 7ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

இந்த 20 விளையாட்டுகளில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர் வீராங்கனைகள் பயன்பெறுவார்கள். அவர்களுக்கு இனி ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் மத்திய அரசுப் பணி கிடைக்கும்.

அண்மையில் அறிவிக்கப் பட்ட விளையாட்டு விருதுகள் பட்டியலில் துரோணாச்சார்யா விருதில் மல்லாகம்ப், வுஷூ பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விளையாட்டுகள் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம்பெற்றுள்ளன.

இவைதவிர மத்திய கல்வி துறை அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ‘போலியோ பாதிப்பு முதல் வீல் சேர் கூடைப்பந்து வரை’- ஒரு பெண்ணின் வெற்றிப் பயணம்.