2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எப்போது?- பதிலளித்த கங்குலி

Update: 2020-11-08 05:29 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். இதுகுறித்து, “2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும். அத்துடன் அந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நவம்பர் மாதம் மூலம் கோவாவில் ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தத் தொடர் சிறப்பாக நடைபெறும் பட்சத்தில் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்கிலாந்து அணியும் அடுத்தாண்டு இந்திய சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஐபிஎல் தொடர் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும். இம்முறை கொரோனா ஊரடங்கினால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், தொடர் யுஏஇயில் நடத்தப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்தச் சூழலில் தற்போது கங்குலியின் பேட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: ‘தனது குழந்தை பிறப்பை வெற்றியுடன் கொண்டாடிய’ சன்ரைசர்ஸ் அணியின் நடஜாரன்