முழுவதுமாக இந்திய வீரர்களை களமிறக்க விரும்பும் ஸ்ரீநிதி எப் சி

Update: 2020-09-12 13:58 GMT

இந்திய கால்பந்து அமைப்பில் இரண்டாவது நிலை லீக்கான ஐ லீக் தொடரின் 2021-22 சீசனில் புதிதாக களமிறங்க உள்ளது விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ நிதி எப் சி கால்பந்து அணி. ஸ்ரீ நிதி குழுமம் ஏற்கனவே ஏ ஐ எப் எப் நடத்தும் யூத் லீக் போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஏ ஐ ஐ எப் தொலைக்காட்சியுடன் நடந்த உரையாடலில் ஸ்ரீ நிதி குழுமத்தின் தலைவர் தாஹெர் மகி கட்டிகானெனி கூறியது, விசாகப்பட்டினத்தில் 50 கோடி செலவில் ஸ்ரீ நிதி கால்பந்து அரங்கினை உருவாக்கி வருவதாக கூறினார். கொரோனா தொற்று காரணமாக கட்டிட பணிகள் தடைபட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க உலகத்தரம் வாய்ந்த வசதிகள் நிச்சயம் தேவை. இதுவே இந்த அரங்கினை அமைப்பதற்கு முக்கிய காரணமாகும்‌ என அவர் கூறினார். மேலும் தங்களிடம் நான்கு தரமான மைதானங்கள் உள்ளதாகவும், உடற் பயிற்சி கூடம், மருத்துவ வசதிகள் மற்றும் அனைத்து தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனக் கூறினார். தங்களது முக்கிய லட்சியமே இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபடுவது தான் எனவும், அதோடு முடிந்த வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் தற்போது விளையாட வரும் இளம் வீரர்களுக்கு கல்வி உதவியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து விளையாட வரும் உள்ளூர் வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் எந்த கட்டணமும் பெறாமல் செய்து வருவதாக கூறினார்.