10 வயதில் வந்த ஐடியா பலனளித்தன் பயன்- ஷபாலியின் வெற்றிப் பயணம்

Update: 2020-01-28 15:42 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 31ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்குப் பிறகு அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடருக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தரப்பு மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இளம் பேட்டிங் சூராவளி ஷபாலி வர்மா முக்கிய கவனத்தை பெறுவார். ஏனென்றால் இந்த பதினாறு வயது சிறுமி ஒரு அசைக்க முடியாத பேட்டிங் வீராங்கனையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஷபாலி வர்மா. இவரது தந்தை அப் பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். ஷபாலி வர்மா தனது 10 வயதில் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் அவருடைய தந்தை ஒரு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்துள்ளார்.

எனினும் சிறுவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் ஷபாலிக்கு காயம் ஏற்பட்டு விடும் என்பதால் அவர் விளையாட போட்டி நடத்துனர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டு துவண்டு போகாமல் தான் போட்டிகளில் பங்கேற்க ஒரு சிறந்த வழியை ஷபாலியே கண்டறிந்துள்ளார்.

அதாவது தான் சிறுவர்கள் போல இருக்க வேண்டும் என்பதற்காக தனது முடியை ஒரு ஆண் குழந்தை போல் வெட்டியுள்ளார். அதற்கு பின் அவர் பெண் என யாரும் கண்டறியாததால் அவர் சிறுவர்கள் போட்டியில் விளையாடி நல்ல பயிற்சிப் பெற்றார். பின்னர் படிப்படியாக முன்னேறி ஹரியானா மகளீர் அணியில் இடம்பிடித்தார்.

ஷபாலியின் கனவிற்கு அவரது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். ஷபாலியிடம் அவரது தந்தை கூறியது ஒன்றே ஒன்று தான். அது, "உனது வாழ்வில் முதல் 19ஆண்டுகள் உன்னுடையது. அதில் நீ என்ன வேண்டுமானாலும் செய்து பெரிதாக சாதிக்க வேண்டும். அவ்வாறு 19வயதிற்குள் சாதிக்காமல் விட்டால், பிறகு நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஷபாலி வர்மா தனது தந்தை கூறியதை ஒரு தாரக மந்திரமாக கொண்டு கடினமாக உழைத்தார். தன்னுடன் விளையாட சிறுமிகள் யாரும் இல்லாததால் பெரும்பாலும் சிறுவர்களுடனேயே பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக ஷபாலி வர்மா இந்தியாவிற்காக களமிறங்கினார். அப்போது பெரிதாக சோபிக்கவில்லை. எனினும் அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில் அரைசதம் கடந்த இந்தியர் என்ற சாதனையை ஷபாலி படைத்தார். இவர் 15வயது 285 நாட்களில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் தனது ஐகான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 16வயது 213 நாட்களில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்திருந்தார். அதுவே அப்போது வரை சாதனையாக இருந்தது.

அதன்பின்னர் ஷபாலி வர்மா இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு பெரிய நட்சத்திரமாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய மகளீர் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தினார்.

இந்தத் திறமை வாய்ந்த ஆட்டத்தை தனது முதல் உலகக் கோப்பையிலும் ஷபாலி வர்மா தொடர்ந்து இந்தியாவிற்கு டி20 உலகக் கோப்பையை பெற்று தருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.