ஒரே போட்டியில் 9 கோல்கள், தமிழக மகளிர் கால்பந்து கிளப் அசத்தல்!

Update: 2020-01-30 11:04 GMT

மகளிருக்கான கால்பந்து லீக் போட்டிகள் பெங்களூருவில்

நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாட்டைச்

சேர்ந்த சேது எஃப்.சி,  பி.பி.கே டி.ஏ.வி அணிகள் மோதின.

இதற்கு முந்தைய போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் க்ரிப்ஷா எஃப்.சி அணியிடம் தோல்வியை தழுவியது சேது எஃப்.சி. ஆனால், இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய வீராங்கனைகள், மொத்தம் 9 கோல்கள் அடித்தனர்.

போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சேது எஃப்.சி அணி வீராங்கனைகள், முதல் பாதி முடியும் போது 3 கோல்கள் அடித்திருந்தனர். 3-0 என முன்னிலை வகித்து வந்தது சேது எஃப்.சி அணி (சந்தியா 14', 45' ; சுமித்ரா 18')

இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடிய சேது எஃப்.சி வீராங்கனைகள் 6 கோல்கள் அடித்து அசத்தினர். (கார்த்திகா 50', 82', 89' ; சுமித்ரா 60' ; சந்தியா 81' ; குந்தி குமாரி 84') கோல் மழை பொழிந்த சேது எஃப்.சி அணியை எதிர்த்து பி.பி.கே டி.ஏ.வி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இந்த போட்டியில் சேது எஃப்.சி அணியைச் சேர்ந்த சந்தியா,

கார்த்திகா ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்தனர், போட்டி முடிவில், 9-0 என சேது எஃப்.சி அணி போட்டியை வென்றது.

அடுத்து, பிப்ரவரி 2-ம் தேதி நடக்கும் போட்டியில் கிக்ஸ்டார்ட் எஃப்,சி கர்நாடகா அணியை சேது எஃப்,சி அணி எதிர்கொள்கிறது. ஜனவரி மாதம் தொடங்கிய மகளிர் கால்பந்து லீக், பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா, மணிப்பூர், குஜராத், ஒரிஸா, கோவா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல அணிகள் இத்தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி, மணிப்பூர் போலீஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் சேது எஃப்.சி அணி அதிரடியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த ஆண்டு தொடருக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வாகியிருக்கும்

ஒரே அணி இது! கடந்த ஆண்டு போல, இம்முறையும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக

பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. இரு

பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதியில்

போட்டியிடும்.