பெட் கோப்பை: காயத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கும் சானியா அசத்துவாரா? 

Update: 2020-03-02 10:54 GMT

மகளீர் குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை நாளை முதல் துபாயில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது. இதில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா, ருதுஜா போசலே, ரியா பாட்டியா ஆகியோ இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய சானியா மிர்சா தற்போது முழு உடற்தகுதிப் பெற்று களமிறங்க உள்ளார். பெட் கோப்பை டென்னிஸ் தொடர் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், இப்போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் இந்தப் போட்டிகள் நாளை முதல் துபாயில் தொடங்க உள்ளன. இந்திய அணி சீனா, சீன தைபே, கொரியா,இந்தோனேஷியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் மோதவுள்ளது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகும் ஒருமுறை பிறரை எதிர்த்து மோதம். அதன்பின்னர் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணிக்கு மிகவும் சவாலாக இருப்பது சீனா மற்றும் சீனா தைபே அணிகளாகும். ஏனென்றால், சீனா அணியில் குயாங் வாங்(தரவரிசை எண் 28), சூஹாய் சாங்(தரவரிசை 31), சாய்சை சிங்கு(தரவரிசை 37), பெங்கு(தரவரிசை 103) என முன்னிலை வீராங்கனை இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல சீன தைபே அணியில் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சு வே ஹிசிஷ் இடம்பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் தொடரில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று நல்ல ஃபார்மில் உள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை அனுபவ வீராங்கனை சானியா மிர்சா களமிறங்குவது அணிக்கு சற்று கூடுதல் பலமாக உள்ளது. ஏனென்றால் பிப்ரவரியில் பெட் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று இருந்தால், சானியா மிர்சா அதில் பங்கேற்று இருக்க முடிந்திருக்காது. தற்போது காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து விட்டதால் சானியா மிர்சா களமிறங்குவது மிகவும் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

அங்கிதா ரெய்னா

அதேபோல மற்றொரு இளம் வீராங்கனையான அங்கிதா ரெய்னா தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளது கூடுதல் இந்திய அணிக்கு கூடுதல் பலம். அங்கிதா ரெய்னா ஐடிஎஃப் தாய்லாந்து மற்றும் ஐடிஎஃப் இந்திய ஓபன் டென்னிஸ் தொடரை வென்றுள்ளார். அத்துடன் ஐடிஎஃப் தாய்லாந்து ஓபனில் இரட்டையர் பிரிவிலும் இவர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். எனவே இவரும் சானியா மிர்சாவும் அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.