பேட்மிண்டன் களத்தில் மீண்டும் களமிறங்கும் சாய்னா, சிந்து !

Update: 2020-12-22 03:24 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சற்று உலகம் மீண்டும் வர தொடங்கியுள்ளது. இதன்காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் விளையாட்டு போட்டிகள் தொடங்கி வருகின்றன. அந்தவகையில் வரும் ஜனவரி மாதம் மீண்டும் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

உலக பேட்மிண்டன் சங்கம் பிடபிள்யூஎஃப் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி ஜனவரி மாதம் இரண்டு தொடர்கள் நடைபெற உள்ளன. முதலில் ஜனவரி 12-17ஆம் தேதி வரை தாய்லாந்து ஓபன் தொடர் நடைபெற உள்ளது. அதன்பின்னர் ஜனவரி மாதம் 19-24ஆம் தேதி வரை பங்காக் நகரில் மற்றொரு தொடர் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா சார்பில் சாய்னா, சிந்து, ஶ்ரீகாந்த், சாய் பிரணித் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட நாட்கள் களமிறங்காமல் இருந்த இந்திய வீரர் வீராங்கனைகள் தற்போது களமிறங்க உள்ளனர். இதனால் இந்தத் தொடர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஓலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியை பெற இந்தத் தொடர்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற மே 18ஆம் தேதியில் இருக்கும் தரவரிசைப் புள்ளிகள் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே மாதம் நடைபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் இந்தத் தொடரும் முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: உலகக் கோப்பை குத்துச்சண்டையில் 3 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தல்!