ஒலிம்பிக் வெள்ளி முதல் விளையாட்டு அமைச்சர் வரை- ரத்தோரின் ராட்சத பயணம்

Update: 2020-01-29 06:42 GMT

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது. அந்தப் பதக்கத்தை வென்றவர் ராணுவ வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். அப்போது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தனிநபர் பிரிவில் இந்திய வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல் முறையாகும்.

மேலும் உலக அரங்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியா தன்னை மிகவும் பிரபலபடுத்திக் கொண்டதும் அப்போது தான். அவர் அத்துடன் நின்றுவிடாமால் பல சாதனைகளை புரிந்து கடைசியாக விளையாட்டு அமைச்சர் வரை வலம் வந்துள்ளார். அவருடைய பிறந்தநாளான இன்று. அவரின் வெற்றிப் பயணத்தை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது சிறு வயதில் கிரிக்கெட், கைப்பந்து, டிஸ்கஸ் த்ரோ உள்ளிட்ட விளையாட்டுகளில் களமிறங்கியுள்ளார். எனினும் அதன்பின்னர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். 1998ஆம் ஆண்டு தனது 28ஆவது வயதில் தான் முதல் முறையாக ரத்தோர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் இறங்கியுள்ளார்.

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் டபிள் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இவர் தங்கம் வென்று அசத்தினார். அப்போது ரத்தோர் மொத்த இருந்த 200ல் 192 புள்ளிகளை பெற்று சாதனையையும் படைத்தார். அந்தச் சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று உலகளவில் ரத்தோர் பிரபலமானார். அத்துடன் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். மேலும் 2006 மெல்பர்ன் காமன்வெல்த் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று ரத்தோர் சாதனை படைத்தார்.

மேலும் 2 உலக சாம்பியன்ஷிப் பதக்கம் என்று மொத்தமாக 25 பதக்கங்களை ரத்தோர் தன்வசப்படுத்தியிருக்கிறார். அதேபோல ராணுவத்தில் பணியாற்றிய போது கார்கில் போரின் போது ஜம்மு-காஷ்மீரில் இருந்தப் படையில் ரத்தோர் இடம்பெற்று இருந்தார். ராணுவத்தில் கடைசியாக ரத்தோர் கர்னல் பதவியை வகித்தார்.

ராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகு அரசியல் களத்திலும் ரத்தோர் கால் பதித்தார். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைத்தது. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சரியாக சோபிக்காததால் விளையாட்டு துறை இணையமைச்சராக ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

ரத்தோர் விளையாட்டு அமைச்சராக இருந்தப் போது அவர் கொண்டு வந்த முக்கியமான விளையாட்டு திட்டம் தான் 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' திட்டம். அவர் விளையாட்டு வீரர்களை பள்ளி பருவம் முதல் உருவாக்க திட்டமிட்டார். அதன் பயனாக வந்தவர் தான் ஹீமா தாஸ், அன்சி சாஜன் உள்ளிட்ட வீராங்கனைகள். அவரின் திட்டம் தற்போது அதற்கான பயனை தர ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம்.

இப்படி ராணுவம்,விளையாட்டு, அரசியல் என்ற அனைத்து துறைகளிலும் கால் பதித்து வெற்றிப் பெற்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது மகனையும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் களமிறக்கியுள்ளார். அவரது மகன் மானவ் ஆதித்யா சிங் ரத்தோர் 14வயதில் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் கடந்த ஆண்டு 21 வயதிற்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா கேம்ஸ் பதக்கத்தையும் வென்றார். ரத்தோரை போல அவரது மகனும் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.