பப்ஜிக்கு மாற்று என்ன?- பதிலளித்த தமிழாஸ் பப்ஜி டீம் சி.இ.ஒ

Update: 2020-09-03 13:06 GMT

மத்திய அரசு பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 118 சீன அப்களை நேற்று தடை செய்தது உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவு பப்ஜி பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பப்ஜி தடை தொடர்பாக தமிழாஸ் என்ற பப்ஜி அணியின் சிஇஒ ஞானசேகரிடம் ‘த பிர்ட்ஜ்’ தளம் தொலைப் பேசியில் கலந்துரையாடியது.

அதில் அவர் பப்ஜி தடை தொடர்பாகவும் பப்ஜிக்கு மாற்று என்னவென்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “முதலில் பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்படும் என்ற வதந்தி வந்தது. அப்போது நாங்கள் அதனை நம்பவில்லை. எனினும் மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழாஸ் டீமிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பப்ஜி பிரியர்களுக்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்த தடை வீரர்களைவிட பப்ஜி விளையாட்டு தொடர்பாக வேலை செய்தவர்களை மிகவும் பாதிக்கும். அத்துடன் கேமிங் வட்டாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பப்ஜிக்கு மாற்றாக ஃபரெனா ஃபிரீ ஃபையர் கேம், கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் உள்ளன. அந்த விளையாட்டுகளுக்கும் கிட்டதட்ட பப்ஜி மாதிரியான விளையாட்டுகள் தான். எனவே பப்ஜி வீரர்கள் அந்த விளையாட்டுகளுக்கு விரைவில் மாறுவார்கள். எனவே பப்ஜிக்கு பதிலாக இனி இந்த இரு விளையாட்டுகள் இ-ஸ்போர்ட்ஸ் வட்டாரத்தில் பிரபலம் அடையும்.

தமிழாஸ் டீமை பொருத்தவரை நாங்கள் தொடக்கத்தில் பப்ஜியில் மட்டும் இருந்திருந்தாலும், தற்போது நாங்கள் கிளாஸ் ஆஃப் கிளான்ஸ் போன்ற விளையாட்டுகளிலும் உள்ளதால் பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தற்போது ஊரடங்கினால் பலர் ஆன்லைன் கேம்களை விளையாட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக லூடோ, செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை பலர் விளையாட ஆரம்பித்துள்ளனர். எனவே மற்ற இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளும் பிரபலம் அடையும்” எனக் கூறியுள்ளார்.

ஞானசேகர் தமிழாஸ் டீம் மட்டுமில்லாமல், ‘கேம்பிளே’ என்ற கேமிங் தொடர்பான ஆன்லைன் வர்த்தக வலைதளத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “ஒலிம்பியாட் வெற்றிக்கு பிறகாவது செஸ் வீரர் வீராங்கனைகளுக்கு விருது…”- விஸ்வநாத் ஆனந்த்