ப்ராக் சேலஞ்சர் டென்னிஸ்: சுமித் நாகல் காலிறுதியில் வாவ்ரிங்காவுடன் மோதல்
ப்ராக் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ப்ராக் சேலஞ்சர் இந்திய வீரர்கள் சுமித் நாகல், ஶ்ரீராம் பாலாஜி, திவிஜ் சரண் ஆகியோ பங்கேற்று உள்ளனர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 127ஆவது இடத்திலுள்ள சுமித் நாகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உள்ளூர் வீரர் ஜிரி லெஹேகாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சுமார் 2 மணி நேரம் 21 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 5-7,7-6,6-3 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுமித் நாகல் போராடி வென்றார். இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சுமித் அனுபவம் வாய்ந்த சுவட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொள்ள உள்ளார்.
மேலும் இரட்டையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் ஶ்ரீராம் பாலாஜி மற்றும் திவிஜ் சரண் வெற்று பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஶ்ரீராம் பாலாஜி- கிம்மர் காப்பன்ஸ் இணை மோல்டோனி-ஹூகஸ் இணையை 7-5,4-6,10-6 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேபோல இந்திய வீரர் திவிஜ் சரண்- நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் ஜோடி ஜோனாஸ்-மைக்கேல் இணையை 6-3,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து திவிஜ் சரண் ஜோடியும் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Prague R3 ✅
Watch me play against Stan The Man tomorrow pic.twitter.com/b8pelnBCqL
— Sumit Nagal (@nagalsumit) August 19, 2020
முன்னதாக வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ள யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு இந்தியாவின் சுமித் நாகல் நேரடியாக தகுதி பெற்றார். தரவரிசையில் 127ஆவது இடத்தில் இருக்கும் சுமித் நாகல் யுஎஸ் ஓபன் கிராண்டஸ்லாம் தொடரில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடரில் சுமித் நாகல் முதல் போட்டியில் அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரரிடம் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
எனவே இம்முறை யுஎஸ் ஓபன் தொடருக்கு முன்பாக அனுபவம் வாய்ந்த வாவ்ரிங்காவை சுமித் நாகல் எதிர்கொள்ள உள்ளது அவருக்கு நல்ல பயிற்சியாக அமையும். இந்தப் போட்டியில் சுமித் நாகல் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: டேக்ஸி ஓட்டும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் தயான்சந்த் விருதுக்கு பரிந்துரை