உலக ஷஷூ சாம்பியனானார் காவலர் பூனம் கத்ரி !

Update: 2020-09-05 14:12 GMT

வுஷூ விளையாட்டில் இந்தியாவின் நட்சத்திரமாக விளங்குபவர் பூனம் கத்ரி. இவர் இதுவரை 10 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தினார். தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வென்ற வெள்ளிப்பதக்கம் தங்கமாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வுஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான 75கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூனம் கத்ரி கலந்து கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய பூனம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று இருந்தார்.

இறுதிப் போட்டியில் பூனம் கத்ரி ஈரான் நாட்டின் மரியத்தை எதிர்த்து சண்டையிட்டார். இதில் பூனம் கத்ரி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தத் தொடருக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்ற மரியத்திற்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி போதை மருந்து பரிசோதனையில் மரியம் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பூனம் கத்ரி சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூனம், “எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் ஜாஜர் பகுதியைச் சேர்ந்த பூனம் கத்ரி தற்போது ஆயுத எல்லைப் படையில் (எஸ்.எஸ்.பி) காவலராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் இந்த வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டை சேர்ந்த 17வயது சிறுவன் உலக ஆன்லைன் ஓபன் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்!