பிபிஎல் 2020: நார்த் ஈஸ்ட்ன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக பெங்களூரு சாம்பியன்

Update: 2020-02-09 17:13 GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் சீசன் 5-ன் இறுதிப் போட்டி ஹைதராபாத்திலுள்ள ஜி.எம்.சி.பாலயோகி ஸ்டியேத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணியும் மோதினர்.

முதலில் ஆடவர் ஒற்றையர் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியின் கேப்டன் சாய் பிரணீத் நார்த் ஈஸ்டன் அணியின் லீ யூவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் கேமை லீ 15-14 என்ற கணக்கில் வென்றார். எனினும் அதன்பின்னர் சூதாரித்து கொண்ட பெங்களூரு கேப்டன் சாய் பிரணீத் அடுத்த இரண்டு கேம்களை 15-9,15-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அத்துடன் பெங்களூரு அணிக்கு 1-0 என்ற முன்னிலையையும் அவர் பெற்று தந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில், பெங்களூரு அணியின் அருண் ஜார்ஜ்-சபுட்ரோ இணை நார்த் ஈஸ்டன் அணியின் இசாரா-லீ யின் ஜோடியை எதிர்கொண்டது. இது நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணிக்கு ட்ரம்ப் போட்டியாக இருந்தது. இதில் முதல் கேமை இசாரா-லீ இணை 15-11 என்ற கணக்கில் வென்றது. இரண்டாவது கேமை ஜார்ஜ்-சபுட்ரோ இணை 15-13 என்ற கணக்கில் வென்றது.

மூன்றாவது கேமை இசாரா-லீ இணை 15-14 என்ற கணக்கில் வென்றனர்.இதன்மூலம் நார்த் ஈஸ்டன் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி தங்களது ட்ரம்ப் போட்டியை வென்றதால் 2 புள்ளிகளை பெற்றது.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை தா சு யிங் நார்த் ஈஸ்டன் அணியின் எம்.லீயை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தா சு யிங் 15-9,15-12 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்றார். இதன்மூலம் பெங்களூரு அணி 2-2 என்று சமன் செய்தது. அத்துடன் இந்தப் பிபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தா சு யிங் சாதனைப் படைத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் பெங்களூரு அணியின் சான்-வான் இணை நார்த் ஈஸ்டன் அணியின் கார்கா-நா இணையுடன் மோதியது. இந்தப் போட்டி பெங்களூரு அணிக்கு ட்ரம்ப் போட்டியாக இருந்தது. இதில் பெங்களூருவின் சான்-வான் ஜோடி 15-14,14-15,15-12 என்ற கணக்கில் வென்றனர். பெங்களூரு அணி ட்ரம்ப் போட்டியை வென்றதால் இரண்டு புள்ளிகள் கிடைத்தது.

இதன்மூலம் 4-2 என்ற கணக்கில் பெங்களூரு ரப்டர்ஸ் அணி இறுதிப் போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது. பிபிஎல் வரலாற்றில் ஒரு அணி இரு முறை கோப்பையை வெல்வது இதுவே முதலாவது ஆகும். பிபிஎல் சாம்பியனான பெங்களூரு அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.