பிபிஎல்: புனே7ஏசஸ் அணியை தோற்கடித்து நடப்புச் சாம்பியன் பெங்களூரு இறுதி போட்டிக்கு தகுதி

Update: 2020-02-08 17:04 GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் புனே 7 ஏசஸ் அணியும் மோதினர். முதலில் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியின் ஜார்ஜ்-சப்ட்ரோ இணை புனே 7 ஏசஸ் அணியின் சிராக் செட்டி-ஹெண்ட்ரா ஜோடியை எதிர்கொண்டது.

புனே 7 ஏசஸ் அணிக்கு இது ட்ரம்ப் போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியை சரியாக பயன்படுத்தி கொண்ட புனே 7ஏசஸ் அணியின் சிராக் செட்டி-ஹெண்ட்ரா ஜோடி 15-12,15-10 என்ற கணக்கில் எளிதில் வென்றது. இதன்மூலம் புனே 7 ஏசஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெங்களூரு அணியின் லெவர்டேவும் புனே அணியின் மிதுன் மஞ்சுநாதும் விளையாடினர். இந்தப் போட்டியில் முதல் கேம்மை லெவர்டே 15-14 வென்றார். இரண்டாவது கேமை மிதுன் 15-9 என்று கைப்பற்றினார். எனினும் மூன்றாவது கேமை லெவர்டே 15-6 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் பெங்களூரு ரப்டர்ஸ் அணி 1-2 என்று புனே 7 ஏசஸ் அணியின் முன்னிலையை குறைத்தது.

இதன்பின்னர் மீண்டும் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் சாய் பிரணீத் புனே அணியின் சகாய்க்கு எதிராக விளையாடினார். இதில் சகாய் 15-11,15-13 என்ற கணக்கில் பிரணீத்தை வீழ்த்தினார். அத்துடன் 3-1 என்று புள்ளிகளை புனே அணியின் முன்னிலையை அதிகரித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியின் தா சு யிங்கும் புனே 7ஏசஸ் அணியின் ரித்புர்னா தாஸூம் மோதினர். இது பெங்களூரு அணிக்கு ட்ரம்ப் போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியில் ரிதுபர்னா தாஸ் சிறப்பாக விளையாடினாலும் அதிக தவறுகள் செய்ததால் போட்டியை இழந்தார். தா சு யிங் 15-12,15-12 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனில் இருந்தனர்.

எனவே இறுதிப் போட்டிக்கு யார் நுழைவார் என்பதை தீர்மானிக்க கடைசியாக கலப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியின் சூன்-வான் ஜோடி புனே அணியின் கிறிஸ் அட்காக்-கேப்ரியல் அட்காக் இணையை எதிர்கொண்டது. பரப்பரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சூன்-வான் இணை 15-13,15- 10 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்தப் போட்டியை 4-3 என்று வென்று பெங்களூரு ரப்டர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

ஏற்கெனவே நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி வென்றது. நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணியும் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் விளையாடுகின்றன.