ஆஸி.ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் பயஸ், போபன்னா முன்னேற்றம்!

Update: 2020-01-26 11:01 GMT

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின்

ரோஹன் போபன்னா, லியாண்டர் பயஸ் ஆகியோர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபன்னா - உக்ரேனியாவின் நதியா கிச்சனோக் இணை, அமெரிக்காவின் நிக்கோல் மெலிசர் - பிரேசிலின் ப்ரூனோ சோர்ஸ் இணையை தோற்கடித்தது.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போபன்னா - நதியா இணை 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்றனர். இரண்டாம் சுற்றை வென்றதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்த ஜோடி.

முதல் சுற்றில் உக்ரேனியாவின் லிட்மைலா - அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்கை 7-5, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் போபன்னா - நதியா ஜோடி வென்றிருந்தது.

அடுத்து நடக்க இருக்கும் காலிறுதி போட்டியில், போபன்னா - கிச்சனோக் ஜோடி, பார்பொரா - நிகோலா மெக்டிக் vs அமாண்டா - நொக் க்ரிகியோஸ் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்ள உள்ளது.

வெற்றியுடன் தொடங்கிய லியாண்டர் பயஸ்

2020-ம் ஆண்டுடன் டென்னிஸில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் லத்வியாவின் ஜெலேனே ஒஸ்தாபென்கோவோடு ஜோடி சேர்ந்து விளையாடினார். இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் சாண்டர்ஸ் - மார்க் போல்மான்ஸை தோற்கடித்துள்ளனர்.

முதல் செட்டில் சோபிக்காத பயஸ் - ஜெலேனே இணை அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடியது.

90 நிமிடங்களுக்குள் முடிந்த இந்த போட்டியில் பயஸ் - ஜெலேனே ஜோடி சிறப்பாக

விளையாடியது.

இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்த ஜோடி, அமெரிக்காவின் பெதானி

மெட்டெக் சாண்ட்ஸ் - பிரிட்டனின் ஜாமி முர்ரேவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஆண்டு டென்னிஸில் இருந்து ஓய்வு பெற இருக்கும் பயஸ், சில டென்னிஸ் தொடர்களில் மட்டுமே பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்று வெற்றி பயஸுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது.