செஸ் ஒலிம்பியாட் 2020: கோனேரு ஹம்பியின் அசத்தலான ஆட்டத்தால் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி !
இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா போலாந்து அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் குஜராத்தி ஆகியோர் தோல்வி அடைந்தனர். ஹரிகா மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் தங்களது போட்டிகளை டிரா செய்தனர். நிஹால் சரன் மட்டும் வெற்றியை பதிவு செய்தார். இதனால் இந்திய அணி முதல் சுற்றை 2-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பெற்றனர். பிரக்ஞானந்தா மட்டும் தோல்வி அடைந்தார். எனினும் இந்திய அணி 4.5-1.5 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை வென்றது.
இதனையடுத்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில் யார் விளையாட வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி இந்திய தரப்பில் கோனேரு ஹம்பியும் போலாந்து தரப்பில் மோனிகா சாகோவும் விளையாடினர்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்ற இந்த டைபிரேக்கர் போட்டியில் கோனேரு ஹம்பி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மோனிகாவை தோற்கடித்தார். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றி தொடர்பாக இந்திய கேப்டன் விதித் குஜராத்தி ‘செஸ்.காம்’ என்ற தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். முதல் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமளித்தது. எனினும் இரண்டாவது சுற்றில் மொத்த அணியும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றது.
World Women Rapid Champion Koneru Humpy wins a decisive Armageddon game with Black against Monika Socko & Team India makes it to the final of FIDE Online #ChesOlympiad. They will play a winner of Russia - USA match that will start at 16:00 UTC. pic.twitter.com/n29sDaOnnZ
— International Chess Federation (@FIDE_chess) August 29, 2020
இக்கட்டான சூழ்நிலையில் கோனேரு ஹம்பி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை நாங்கள் வெற்றியுடன் கொண்டாடியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 2014ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ரஷ்ய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றிப் பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ‘நியூஸ் பேப்பர் போடுவது முதல் கேல் ரத்னா வரை’- மாரியப்பனின் சாதனைப் பயணம்