செஸ் ஒலிம்பியாட் 2020: மின்சார தடையால் விதித் குஜராத்தி,கோனேரு ஹம்பி போட்டியில் தோல்வி

Update: 2020-08-23 02:35 GMT

இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, விஸ்வநாதன் ஆனந்த், பிரக்நானந்தா உள்ளிட்டவர்களை கொண்ட இந்தியா அணி பங்கேற்று உள்ளது. மேலும் சீனா, மங்கோலியா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகளும் இதில் பங்கேற்று உள்ளன. இந்தத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தத் தொடரின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி இந்தோனேஷியா, ஈரான் மற்றும் மங்கோலிய அணிகளுக்கு எதிராக விளையாடியது. இதில் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விதித் குஜராத்தி மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் மின்சாரம் தடைப்பட்டதால் தோல்வியை தழுவியுள்ளனர்.

இந்த இருவரும் தங்களது போட்டியில் வெற்றி பெரும் வாய்ப்பில் இருந்துள்ளனர். எனினும் மின்சார தடைப்பட்டதால் மங்கோலிய அணியனர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 3-3 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய அணியின் கேப்டனான விதித் குஜராத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”மங்கோலிய- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் நான் வெற்றிப் பெறும் தருவாயிலிருந்த போது எனது வீட்டில் மின்சார தடை ஏற்பட்டது. இதனால் நான் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தேன்.

அதேபோல கோனேரு ஹம்பியின் போட்டியிலும் மின்சார தடை ஏற்பட்டதால் அவரும் தோல்வி அடைந்தார். இதுபோன்ற காரணங்களால் போட்டியில் தோற்பது மிகவும் வேதனையான ஒன்று. எனினும் இனி வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் ” எனத் தெரிவித்துள்ளார்.

கோனேரு ஹம்பி

நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் இந்திய அணி இந்தோனேஷிய அணியை 4.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதேபோல ஈரான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் 11 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 12 புள்ளிகளுடன் சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தீப்தி சர்மாவை அர்ஜுனா விருது வரை அழைத்து சென்ற 50 மீட்டர் 'த்ரோ'