ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் அசத்திய இந்திய வீரர்கள் 

Update: 2020-03-13 15:55 GMT

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர் விகாஷ், சுரவாஜூல்லா ஸ்நேகித், ஜீத் சந்திரா, ஷா மனுஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

காலிறுதி சுற்றில் மானவ் தாக்கர் விகாஷ் ஓமனின் அல்-ரீயாமி இசாவை 11-1,11-8,11-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். அதேபோல சுரவாஜூல்லா ஸ்நேகித் கனடாவின் ஜெரேமியை 11-6,11-2,15-13 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஜீத் சந்திரா ஓமனின் அல்-ஷாஹி மாத்தை 11-3,11-6,11-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

விஷால் மானவ் தாக்கர்

மேலும் மற்றொரு இந்திய வீரர் ஷா மனுஷ் சிங்கப்பூரின் பாங் யு என் கியூனை 11-7,11-8 ,11-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் மானவ் தாக்கர் விஷால் சுரவாஜூல்லா ஸ்நேகித்தை எதிர் கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் ஜீத் சந்திரா ஷா மானுஷை எதிர்த்து விளையாட உள்ளார்.

இப்பிரிவில் நான்கு அரையிறுதி போட்டியாளர்களும் இந்தியர்கள் என்பதால், 21 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் ஒருவரே வெல்ல போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இதே வீரர்கள் ஆடவர் பிரிவிலும் கலந்து கொண்டுள்ளனர்.

ஜீத் சந்திரா

ஆடவர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சரத் கமல், ஹர்மித் தேசாய் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்களும் இன்று தங்களது முதல் சுற்று போட்டியில் விளையாட உள்ளனர். இதற்கிடையே ஐடிடிஎஃப் வரும் திங்கட்கிழமை முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் வரும் ஏப்ரல் வரை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பில் ஐடிடிஎஃப், “கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக நாடுகளில் பயணம் செய்வதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்களில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் திங்கட்கிழமை மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை எங்களுடைய பணிகளை நிறுத்த உள்ளோம். மேலும் ஹாங்காங் மற்றும் சீன ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரவாஜூல்லா ஸ்நேகித்

ஏற்கெனவே இன்று தொடங்கவிருந்த போலிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் போடப்பட்டுள்ள தடைகளின் காரணமாக விளையாட்டு தொடர்கள் மற்றும் போட்டிகள் தொடர்ந்து ரத்தாகி வருவது குறிப்பிடத்தக்கது.