‘கிரிக்கெட், சினிமா ஆகியவற்றிற்கு கிடைக்கும் ஆதரவு எங்களுக்கு இல்லை’- ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்

Update: 2020-09-19 10:32 GMT

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் ஒலிம்பிக் மகளிர் பளுத்தூக்குதலில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றார். அவர் அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி தான்.

இந்நிலையில் இந்தச் சாதனையை நினைவு கொள்ளும் விதமாக அவருடன் ‘த பிர்ட்ஜ்’ தளம் ஃபேஸ்புக் தளம் மூலம் ஒரு உரையாடலை நடத்தியது. அதில் அவர் தனது ஒலிம்பிக் வெற்றி மற்றும் மகளிர் சக்தி குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில்,“நான் என்னுடைய 12 வயதிலிருந்து பளுத்தூக்குதல் விளையாட்டு பயிற்சி செய்து வருகிறேன். முதல் முறையாக நான் பளுத் தூக்குதல் விளையாட்டிற்கு சென்ற போது நான் இந்த விளையாட்டிற்கு பங்கேற்க வேண்டாமென்று பலர் தடுத்தனர். அந்த வயதில் ஒருவர் எதை வேண்டாம் என்கிறார்களோ அதை தான் நாம் செய்வோம். அவ்வாறு தான் முதல் முறையாக பளுத்தூக்கும் விளையாட்டிற்குள் வந்தேன்.

Full View

1995ஆம் ஆண்டு நான் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற போது அப்போது எனக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் 2000ஆம் ஆண்டு முதல் முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற போது சற்று அதிகம் கவனிக்கப் பட்டேன். எனினும் தற்போதும் சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் ஆதரவு எங்களை போன்ற ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு கிடைப்பதில்லை. அது மிகவும் வருத்தமாக உள்ளது.

இந்தியாவிலிருந்து நிறையே பேர் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் காலம் வரும்போது இவை அனைத்தும் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்கள் எப்போதும் ஆண்களைவிட அதிக பலம் உடையவர்கள். ஆண்கள் பெண்களைவிட பலம் வாய்ந்தவர்கள் என்பது வெறும் மனம் சார்ந்த கூற்றாகும்.

பெண்கள் தகுந்த உடல் ஆரோகியத்தோடும் மன உறுதியோடும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். என்னுடைய அகாடமியில் பல சிறுமிகள் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களிலிருந்து சிலர் 2028ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஒலிம்பக் பதக்கத்தை வெல்வார்கள். அவர்களை அந்த அளவிற்கு பயிற்சி தயார் செய்வதே என்னுடைய இலக்கு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி மேலும் பல வீரர்களை உருவாக்குவார் என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்.

மேலும் படிக்க: மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு – களத்தில் குதித்த ஐபிஎல் அணி