12 முறை தோல்விக்கு பிறகு சாதித்த கோவையின் நிருபமா சஞ்சீவ்

Update: 2021-02-02 07:43 GMT

இந்திய மகளிர் டென்னிஸ் என்றால் உடனே நம் நினைவுக்கு வரும் பெயர் சானியா மிர்சா தான். ஆனால் அவருக்கும் ஒரு முன்னோடியாக ஒரு வீராங்கனை இருந்துள்ளார். அதுவும் அவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்? யார் அந்த வீராங்கனை?

கோயம்புத்தூரை சேர்ந்தவர் நிருபமா சஞ்சீவ். இவர் தனது 5 வயது முதல் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவருடைய தந்தை வைத்தியநாதன் இவருக்கு பயிற்சியாளராக இருந்தார். தனது 13ஆவது வயதில் இவர் 14வயதுக்குட்பட்டோருக்கான தேசிய பட்டத்தை வென்றார்.

அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு 14வயதான நிருபமா டென்னிஸ் விளையாட்டில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தேசிய சாம்பியன் படத்தை தொடர்ச்சியாக இவரே வென்று சாதனை படைத்தார். தனது 18ஆவது வயதில் தொழில்முறை டென்னிஸ் தொடர்களில் இவர் பங்கேற்க திட்டமிட்டார். இதற்காக டேவிட் மேரா என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

1997ஆம் ஆண்டு இவர் வாழ்வில் மிகப் பெரிய தருணம் நடைந்தது. அதாவது ஆண்டு வெளியான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இவர் 134ஆவது இடம்பிடித்து அசத்தினார். இதன்மூலம் தரவரிசையில் 150க்கும் கிழாக இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இவருக்கு வைல்டு கார்டு முறையில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்கிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்தார். மேலும் அதில் முதல் சுற்றில் இத்தாலிய வீராங்கனையை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒரு போட்டியில் வெற்றிப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகாத்தான சாதனையையும் இவர் தன்வசப்படுத்தினார்.

இதற்குமுன்பாக கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தகுதி பெற 12 முறை முயன்ற நிருபமா தோல்வியை தழுவியிருந்தார். அதற்கு காரணம் அவருடன் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் இல்லாதது தான். ஏனென்றால் அவர்களையும் தன் உடன் அழைத்து செல்லும் அளவிற்கு நிருபமாவிடம் பண வசதியில்லை. இதனால் அனைத்து போட்டிகளுக்கும் இவர் தனியாக சென்று களமிறங்கியுள்ளார்.

அதன்பின்னர் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் இவர் மகேஷ் பூபதியுடன் சேர்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 12 முறை தோல்விக்கு பிறகு சாதித்த சாதனை தமிழச்சி தற்போது டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் ஒரு டென்னிஸ் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார். இவருடைய கிராண்ட்ஸ்லாம் சாதனையை 2005ஆம் ஆண்டு சானியா மிர்சா முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘மறைந்த என் அம்மாவிற்கு இந்தக் கோப்பை சமர்ப்பணம்’ – முருகன் அஸ்வின் உருக்கம்